தமிழ்நாடு

நள்ளிரவில் கடலில் மோதிரத்தை மாற்ற ஆசைப்பட்ட தம்பதி - சோகத்தில் முடிந்த திருமண நாள் கொண்டாட்டம்

webteam

திருமண நாளை தம்பதியினர் கொண்டாட சென்ற நிலையில், கடல் அலையில் சிக்கி மனைவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேலூரைச் சேர்ந்தவர்கள் விக்னேஷ்-வினி சைலா(27) தம்பதி. இவர்களுக்கு கடந்த 2018-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் திருமணமானது. இவர்களுக்கு ஒரு வயதில் ஆண் குழந்தை ஒன்றும் உள்ளது. வினி சைலா, வேலூரில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவிலியராக வேலை பார்த்து வந்தார். கணவர் விக்னேஷ், ஜவுளி நிறுவனத்தில் வேலை பார்க்கிறார்.

இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை இவர்களின் 2-வது திருமண நாளை கொண்டாட குடும்பத்துடன் சென்னை வந்துள்ளனர். நீலாங்கரையில் உள்ள நண்பர் வீட்டிற்குச் சென்று விட்டு அன்று இரவு உணவுக்காக ஹோட்டலுக்கு சென்றுள்ளனர். பின்னர், இரவு 11.30 மணியளவில் பாலவாக்கம் பகலைநகர் கடற்கரைக்குச் சென்றுள்ளனர். அப்போது 5 கார்களில் குழந்தைகள், இளைஞர்கள் உட்பட 30-க்கும் மேற்பட்டோர் வருவதைப் பார்த்து, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு போலீசார் அனுமதி கொடுக்க மறுத்துள்ளனர். ஆனால், அவர்கள் கேக் வெட்டிவிட்டு சென்றுவிடுவோம் எனக்கூறி போலீசாரை சமாதானப்படுத்தி உள்ளனர்.

இதையடுத்து, இரவு 12 மணிக்கு மேல் கணவன் விக்னேஷ் மற்றும் மனைவி வினி சைலா ஆகிய இருவரும் கடலில் இறங்கி மோதிரம் மாற்றிக் கொள்ள முயன்றனர். இடுப்பளவு தண்ணீரில் நின்று கொண்டு மோதிரம் இருக்கும் பாக்ஸை திறக்க முயன்றபோது எதிர்பாராதவிதமாக வந்த ராட்சத அலையில் சிக்கி, தடுமாறிக் கீழே விழுந்துள்ளனர். இதில், மனைவி வினி சைலா கடலின் உள்ளே இழுத்துச் செல்லப்பட்டார். கணவர் விக்னேஷ் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

இதைப் பார்த்த போலீசார் உடனடியாக அருகில் இருந்த மீனவர்களின் உதவியோடு வினி சைலாவை தேடும் பணியில் ஈடுபட்டனர். மேலும் நீலாங்கரை போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். இதைத்தொடர்ந்து நேற்று அதிகாலை 2 மணியளவில் வினி சைலாவின் உடல் கொட்டிவாக்கம் கடற்கரையில் கரை ஒதுங்கியது.

இதையடுத்து இறந்தவரின் உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வேலூரில் இருந்து திருமண நாளை கொண்டாட வந்து, மனைவியை பறிகொடுத்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலில் இறங்க வேண்டாம் என பல்வேறு எச்சரிக்கை பலகைகளை காவல் துறையினர் வைத்திருந்தாலும், அதனையும் மீறி பொதுமக்கள் நடந்து கொள்வதால்தான் இதுபோன்ற உயிரிழப்புகள் நடப்பதாக போலீசார் கூறுகின்றனர்.