தமிழ்நாடு

9 ஆண்டுகள் சிறையில் இருக்கும் கணவன்; குடும்ப வறுமையால் மனைவி, மகள் எடுத்த முடிவு

9 ஆண்டுகள் சிறையில் இருக்கும் கணவன்; குடும்ப வறுமையால் மனைவி, மகள் எடுத்த முடிவு

webteam

9 ஆண்டுகளாக கணவர் சிறையில் இருப்பதால் ஏற்பட்ட குடும்ப வறுமை காரணமாக தாய் மற்றும் மகள் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட அதிர்ச்சி சம்பவம் நாகையில் நடந்துள்ளது. 

நாகப்பட்டினம் வெளிப்பாளையம் சவேரியார் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் ஜம்புகேசவன். இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு கொலைவழக்கு சம்பந்தமாக தண்டனை பெற்று திருச்சி மத்திய சிறையில் 9 ஆண்டுகளாக தண்டனை அனுபவித்து வருகிறார். இவரது மனைவி மகேஸ்வரி நாகப்பட்டினம் நகராட்சியில் களப்பணியாளராக பணியாற்றி வருகிறார்.

இவருக்கு அர்ச்சனா என்ற 9 வயது பெண் குழந்தையும், ரோஹித் என்ற 11 வயது ஆண் குழந்தையும் உள்ளனர். சிறையில் கணவர் இருந்து வரும் நிலையில் மகேஷ்வரி பொருளாதார நெருக்கடியில் குடும்பத்தை நடத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து கடன் தொல்லையால் தவித்து வந்த மகேஷ்வரி தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்துள்ளார். இந்த நிலையில் மன உளைச்சலில் இருந்த அவர், தனது மகன் வீட்டில் இல்லாத நேரத்தில் நேற்றிரவு தனது மகளுடன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இதுகுறித்து தகவலறிந்த வெளிப்பாளையம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரிக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வெளிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கணவர் சிறையில் இருக்கும் நிலையில் கடன் தொல்லை காரணமாக நாகையில் 9 வயது மகளுடன் தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.