தமிழ்நாடு

கூலிப்படையை ஏவி கணவரை கொலை செய்த பெண் - சிசிடிவி காட்சியில் அம்பலம்

கூலிப்படையை ஏவி கணவரை கொலை செய்த பெண் - சிசிடிவி காட்சியில் அம்பலம்

webteam

மதுரை அலங்காநல்லூரில் இளங்கோவன் என்ற பைனான்சியர் வெட்டி கொல்லப்பட்ட சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. 

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் பாலமேடு செல்லும் பகுதியில் உள்ள நடராஜ் நகரில் வசித்து வந்தவர் இளங்கோவன். இவரது மனைவி 5 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த நிலையில் அலங்காநல்லூரை சேர்ந்த அபிராமி என்ற பெண்ணுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அப்பெண்ணை திருமணம் செய்து குடும்பத்துடன் நடராஜ் நகரில் வசித்து வந்தார். இளங்கோவன் பைனான்ஸ் தொழில் செய்து வந்துள்ளார். 

இந்நிலையில் அபிராமிக்கு ஏற்கனவே 3 பெண் பிள்ளைகள் உள்ளனர். இதில் மூத்த மகள் அனுசியாவுக்கு இளங்கோவன் அடிக்கடி பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாக தெரிகிறது. இதுகுறித்து அனுசியா அவரது தாயார் அபிராமியிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து தாயும் மகளும் இளங்கோவனை கொலை செய்ய ஏற்கனவே முயற்சித்துள்ளனர். ஆனால் அதிலிருந்து இளங்கோவன் தப்பித்ததாக கூறப்படுகிறது. 

கடந்த 31ஆம் தேதி மதியம் இளங்கோவன் தனது மனைவி அபிராமியுடன் வீட்டின் வாசலில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த 5 இளைஞர்கள் இளங்கோவனை சரமாரியாக வெட்டி சாய்த்தனர். இளங்கோவனை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். 

அபிராமி தொழில் போட்டி காரணமாக தனது கணவரை மர்ம நபர்கள் கொலை செய்துவிட்டதாக புகார் அளித்திருந்தார். அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் தற்போது இளங்கோவன் வெட்டி கொலைசெய்யப்பட்ட சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. 

அதில், இளங்கோவன் கொலை செய்யப்படும்போது அபிராமி எந்த பதட்டமும் இல்லாமல் இருந்தது போலீசாருக்கு சந்தேகத்தை வலுப்படுத்தியது. இதையடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அனுசியாவிற்கு இளங்கோவன் பாலியல் தொந்தரவு கொடுத்ததும், அதனால் அனுசியாவின் நண்பர் பாலகிருஷ்ணன் உதவியுடன் கூலிப்படையை வைத்து அவரை கொலைசெய்ததையும் அபிராமி ஒப்புக்கொண்டார். இதைத்தொடர்ந்து அனுசியாவையும் அபிராமியையும் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், 5 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.