தமிழ்நாடு

பெற்ற குழந்தைகளின் பசியை தீர்க்க தலைமுடியை விற்ற பெண் !

பெற்ற குழந்தைகளின் பசியை தீர்க்க தலைமுடியை விற்ற பெண் !

jagadeesh

தான் பெற்ற மூன்று குழந்தைகளின் பசியை தீர்க்க பணம் இல்லாத காரணத்தால் தன் முடியை ரூ.150-க்கு தாய் விற்ற அவலம் சேலத்தில் நிகழ்ந்துள்ளது.

சேலம் பொன்னம்மா பேட்டையை சேர்ந்தவர் செல்வம். இவரது மனைவி பிரேமா. இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். வீமனூர் பகுதியில் உள்ள செங்கல் சூளையில் வேலை செய்து வந்த செல்வம், செங்கல் சூளை உரிமையாளரிடம் கடன் வாங்கியதாக தெரிகிறது. இந்தக் கடனை அடைக்க செல்வம், மேலும் பலரிடம் கடன் வாங்கியுள்ளார். இதனால் கடன் தொகை 5 லட்சத்தை தாண்டியது. இதனால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக செல்வம் 7 மாதத்திற்கு முன்பு தற்கொலை செய்துகொண்டார்.

மூன்று குழந்தைகளை வைத்துக்கொண்டு செய்வதறியாது, தவித்த பிரேமா செங்கல் சூளையில் வேலைக்கு சேர்ந்துள்ளார். செல்வத்துக்கு கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பிக்கேட்டு பிரேமாவுக்கு நெருக்கடி கொடுத்துள்ளனர். இதனால் கடந்த சில நாள்களுக்கு முன்பு பிரேமாவும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதனைக் கண்ட வேலையாட்கள் பிரேமாவை மீட்டு வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். கையில் பணம் இல்லை குழந்தைகளின் பசியை போக்க யாரும் உதவி செய்யவில்லை.

இதனால் விரக்தியடைந்த பிரேமா தலைமுடியை விற்க முடிவு செய்தார். அதன்படி தலைமுடியை எடைக்கு கொடுத்தார். அதன் மூலம் பிரேமாவிற்கு ரூ.150 கிடைத்தது. அதை வைத்து குழந்தைகளுக்கு உணவு வாங்கி கொடுத்து பசியை போக்கினார்.

இதையறிந்த சமூக ஆர்வலர் பாலா என்பவர் அவரது நண்பர்களுடன் சேர்ந்து பிரேமாவை சந்தித்து உணவு வழங்கினார். மேலும் ஃபேஸ்புக்கிலும் பிரேமாவின் வறுமை குறித்து பதிவிட்டார். இதன் மூலம் ரூ.1 லட்சம் கிடைத்தது. மீதமுள்ள கடன் பணத்தை பாலா மற்றும் அவரது நண்பர்கள் சிலர் ஏற்பாடு செய்து பிரேமாவிற்கு கடன் கொடுத்தவரிடம் வழங்கி உதவியுள்ளனர்.