தமிழ்நாடு கடற்கரையை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது.
மதுரையில் சுமார் ஒரு மணி நேரம் கனழை பெய்தது. பெரியார் பேருந்து நிலையம், சிம்மக்கல், காளவாசல், மீனாட்சி அம்மன் கோயில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. புதுக்கோட்டை மாவட்டம் முள்ளூர், காவேரி நகர், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்ததால் நிலத்தடி நீர் மட்டம் உயரும் நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்தது. மழையின்போது பலத்த காற்று வீசியதால் சாலையோரம் உள்ள மரங்கள் வேரோடு சாய்ந்தன. இதனால் கமுதி- மதுரை இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு மீட்பு வீரர்கள் மரத்தை அப்புறப்படுத்தினர்.
இதனிடையே, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை தொடர வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தமிழகத்தின் ஏனைய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் கூறியுள்ளது.