மழை pt web
தமிழ்நாடு

புதிய காற்றழுத்த தாழ்வு நிலை; தமிழகத்தில் பரவலான மழை

தென்கிழக்கு வங்கக்கடலில் இன்று காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது. இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்தது.

Angeshwar G

காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தின் சென்னை, கள்ளக்குறிச்சி, புதுச்சேரி காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. மழை காரணமாக சில பகுதிகளில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அதிகபட்சமாக வேளாங்கண்ணியில் 13 சென்டி மீட்டர் மழையும், புதுச்சேரியில் அதிகபட்சமாக காரைக்கால் மாவட்டத்தில் 14 சென்டி மழையும் பதிவாகியுள்ளது. வேளாங்கண்ணி கோயிலுக்கு சுற்றுலா வந்திருந்த வெளி மாநிலப் பயணிகள் மழை காரணமாக விடுதிகளுக்குள் முடங்கியுள்ளனர். மழையின் தாக்கம் தொடர்ந்து அதிகரிக்கும் என்பதனால் மழைநீர் தேங்கும் பகுதிகளில் அதை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளில் தேசிய பேரிடர் மேலாண்மை மீட்புத் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக டெல்டா மாவட்டங்களில் அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சை, கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் கன முதல் மிகக்கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் மற்றும் இலங்கைக் கடலோர பகுதிகளில் சூறைக்காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.