தமிழ்நாடு

சென்னை, மதுரை, கோவையில் பரவலாக மழை ! விவசாயிகள் மகிழ்ச்சி

சென்னை, மதுரை, கோவையில் பரவலாக மழை ! விவசாயிகள் மகிழ்ச்சி

jagadeesh

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட தமிழகத்தின் முக்கிய நகரங்களில் பரவலாக மழை பெய்தது.

சென்னையில் நேற்றிரவு அண்ணா சாலை, அண்ணா நகர், கோடம்பாக்கம், வடபழனி, நுங்கம்பாக்கம், மெரினா கடற்கரை, கிண்டி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. இதன் காரணமாக சாலைகளில் மழைநீர் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு உள்ளாயினர். மதுரையில் பெய்த கனமழையால் ஆரப்பாளையம் ரவுண்டானாவில் வைகை ஆற்றங்கரையை இணைக்கும் தார்ச் சாலை, திடீரென சரிந்து விழுந்தது. ‌

இதனால் அவ்வழியே வாகனங்கள் செல்ல முடியாமல், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் சாலையின் அடியில் சென்ற மாநகராட்சியின் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி, வரம்பியம், மணலி, கட்டிமேடு, ஆதிரெங்கம், விட்டுகட்டி, வேளுர், பள்ளங்கோயில், விளக்குடி ஆகிய பகுதிகளில் சுமார் இரண்டு மணி நேரம் கனமழை பெய்தது.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதி‌ளில் இரண்டு மணி நேரமாக‌ மழை பெய்தது.‌ இதனால் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் வெள்ளநீர் சூழ்ந்தது. நெல்லை மாவட்டம் குற்றாலம், தென்காசி‌, செங்கோட்டை ஆகிய இடங்களில் நேற்று காலை முதல்‌ விட்டுவிட்டு மழை பெய்தது. குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்‌ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்‌கையாக அருவிகளில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு த‌டை விதிக்கப்பட்டது. கோவை மாவட்டத்தில் காந்திபுரம், துடியலூர், மேட்டுப்பாளையம் ஆகிய இடங்களில் கடந்த ஐந்து நாட்களாக விட்டு விட்டு மழை பெய்தது‌. நீர்நிலைகள் நிரம்பி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.