செய்தியாளர்: மனோஜ் கண்ணன்
விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் மது ஒழிப்பு மாநாட்டில் வைக்கப்பட்டிருந்த முதல் இந்திய கவர்னர் ஜெனரல் ராஜாஜியின் கட் அவுட் மிகவும் பேசுபொருளானது. ராஜாஜிக்கும் மது விலக்குக்கும் என்ன தொடர்பு... அவரது கட் அவுட் வைக்கப்பட்டதன் பின்னணி என்ன... பார்க்கலாம்.
சி.ராஜகோபாலாச்சாரி. சுருக்கமாக ராஜாஜி. சுதந்திர இந்தியாவில் மிக உயர் பொறுப்பை வகித்த முதல் தமிழர். இந்திய கவர்னர் ஜெனரல் பொறுப்பை வகித்தவர். இப்பதவியை வகித்த ஒரே இந்தியர் இவரே. இந்தியாவின் கடைசி கவர்னர் ஜெனரலும் இவரே. சேலத்தை சேர்ந்த வழக்கறிஞரான ராஜாஜி மது இல்லாத சமுதாயம் அமைப்பதில் பேராரர்வம் கொண்டவர்.
மதுவிலக்கிற்காகவும் தீண்டாமை ஒழிப்பிற்காகவும் சபர்மதியில் காந்தி அமைத்த ஆசிரமம் போலவே தமிழகத்திலும் ஓர் ஆசிரமம் அமைக்க விளைந்தார் ராஜாஜி. அதன் விளைவாக பிறந்ததுதான் இன்றைய நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே புதுப்பாளையத்தில் உள்ள காந்தி ஆசிரமம். இந்த ஆசிரமத்திற்கு தற்போது வயது சரியாக 100.
மதுவிற்கு அடிமையானவர்களுக்கு அறிவுரைகள் கூறி அவர்களை நல்வழிப்படுத்துவது மட்டுமல்ல... அவர்களுக்கு ஆசிரமத்திலேயே பணி கொடுத்து வாழ்வாதாரத்திற்கும் வழி ஏற்படுத்தி தந்தார். இது தவிர மது அரக்கனின் தீமைகளை மக்கள் மனதில் பதிய வைப்பதற்கென்றே பிரத்யேகமாக ஒரு பத்திரிகையையும் நடத்தினார் ராஜாஜி.
1930களின் மத்தியில் சென்னை மாகாணத்தின் முதலமைச்சராக இருந்த போது மாகாணம் முழுவதும் மதுவிலக்கை கொண்டு வந்தார். 1971இல் தமிழகத்தில் மது விலக்கு சட்டத்தில் தளர்வு கொண்டு வரப்பட்ட போது அதை கடுமையாக எதிர்த்தார் சுதந்திரா கட்சியின் தலைவராக இருந்த ராஜாஜி.
இதற்காக அப்போதைய முதலமைச்சர் கருணாநிதியுடன் கடுமையாக வாதிட்டார் ராஜாஜி. மதுவிற்கு எதிராக ராஜாஜி மேற்கொண்ட போராட்டங்கள் அளப்பரியவை. ஆகவே இதன் அடிப்படையில் தமிழகத்தில் மது விலக்கு இயக்கத்தின் முன்னோடி என்ற வகையில்தான் விசிக மாநாட்டில் ராஜாஜியின் பிரமாண்ட உருவப்படம் இடம் பெற்றிருந்ததை பார்க்க முடிகிறது.