சென்னை விமான சாகச நிகழ்ச்சி - கூட்ட நெரிசல் புதிய தலைமுறை
தமிழ்நாடு

விமான சாகச நிகழ்ச்சி: நால்வர் மரணம்... போக்குவரத்தால் ஸ்தம்பித்த சென்னை... குளறுபடி நடந்தது எங்கே?

விமான சாகச நிகழ்ச்சியால் ஏற்பட்ட கூட்ட மற்றும் போக்குவரத்து நெரிசல் காரணமாக இதுவரை நால்வர் மரணித்துள்ளனர், 93 பேர் மருத்துவமனையில் உள்ளனர். இந்தளவுக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது ஏன், குளறுபடி எங்கே நடந்தது என்பது பற்றிய விரிவாக இங்கே அறியலாம்...

ஜெ.நிவேதா

சென்னை மெரினா கடற்கரையில், இன்று விமானப்படை தினத்தையொட்டி பிரமாண்ட விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. இதை நேரில் காண 10 முதல் 15 லட்சம் மக்கள் சென்னை கடற்கரையில் கூடினர். மெரினாவில் மட்டுமே 4 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கூடியிருந்தனர்.

ஆனால் அம்மக்கள் பாதுகாப்பாக நிகழ்விடத்திற்கு வருவதற்கோ, நிகழ்விடத்தில் அவர்கள் வெயிலில் சிரமப்படாமல் இருக்கவோ எந்தவித முன்னேற்பாடுகளும் செய்யப்படவில்லை. இதனால் பலரும் வெயிலின் தாக்கத்தால் தவித்துப்போனர். குடிக்க தண்ணீர்கூட இல்லை என அங்கிருந்த மக்கள் வேதனை தெரிவித்தனர்.

விமான சாகச நிகழ்ச்சி

இவர்கள் கடற்கரைக்கு வந்து சிரமப்பட்ட நிலையில், பல்லாயிரக்கணக்காணோர் கடற்கரைக்கு வந்துசேரவே சிரமப்பட்டனர். குறிப்பாக வேளச்சேரி ரயில் நிலையத்திலிருந்து கடற்கரை ரயில் நிலையம் வர நினைத்த பலரும், ரயில்கள் தாமதமானதால் தண்டவாளத்தில் நடந்து சென்றதை காண முடிந்தது. ரயில் நிலையத்துக்கு வந்த சில ரயில்களிலும், மக்கள் அலைஅலையாய் முண்டியத்திக்கொண்டு ஏறிச்சென்றனர். இவையாவும் காணொளியாக வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இப்படியாக கூட்ட நெரிசல்களுக்கு மத்தியில் போராடி பலரும் மெரினாவில் கூடிய நிலையில், நிகழ்ச்சி 2 மணி நேரத்தில் (காலை 11 மணி முதல் நண்பகல் 1 மணி வரை) முடிவடைந்தது. அந்த 2 மணி நேரத்துக்குள்ளாக வெயிலின் தாக்கத்தால் பலரும் கடற்கரையில் மயங்கி விழுந்தனர். இன்னும் பலர் நெரிசலில் காயமுற்றனர். இவர்கள் அனைவரும் ஆம்புலன்ஸ் மூலம் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

தொடர்ந்து நிகழ்ச்சி முடிந்தபின்னர், கடலே வெளியே வருவதுபோல சாரைசாரையாக மக்கள் கடற்கரையை விட்டு வெளியே வரத்தொடங்கினர். சோகம் என்னவெனில், இவர்கள் வீடு திரும்பவதற்கும் உரிய வசதிகள் செய்யப்படவில்லை.

திரும்பி செல்வதற்காக இவர்கள் மெரினாவிலிருந்து வெளியேறி தொடர்ந்து நேப்பியர் பாலம், அண்ணா சதுக்கத்திலிருந்து முழுமையாக வெளியேறவே 3 மணி நேரத்துக்கும் மேலானது. அந்தளவுக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சரியாக மதியம் 1 மணிக்கு மேல் இவையாவும் நடந்த நிலையில், அந்த நேர வெயில் காரணமாக மேலும் சிலர் மயங்கி விழுந்தனர். கிட்டத்தட்ட 4 மணிக்கு மேல்தான் போக்குவரத்து மெல்ல மெல்ல சீரானது. 6 மணிக்கு அளவில்தான் முழுமையாக போக்குவரத்து சீரடைந்ததாக காவல்துறை தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது.

5 மணி நேரத்துக்குப் பின் சீரடைந்த போக்குவரத்து

நிலைமையை உணர்ந்து ஒவ்வொரு 3.5 நிமிடங்களுக்கு ஒருமுறை மெட்ரோ ரயிலை இயக்குவோம் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்தது. இதனை அறிந்து, மெரினாவிலிருந்து போராடி மெட்ரோவை நோக்கி படையெடுத்தனர் மக்கள்.

இதனால் மெட்ரோவில் கூட்டம் அதிகரித்தது. ஆகவே பல மெட்ரோ நிலையங்களில் உள்ளே நுழைவதற்கான க்யூ.ஆர் ஸ்கேனர்கள் குறிப்பிட்ட நேர இடைவெளிக்கு ஒருமுறை நிறுத்தி வைக்கப்பட்டு இயக்கப்பட்டன. அங்கு கூடிய மக்கள் அனைவரும் பொறுமையாக அனுப்பி வைக்கப்பட்டனர்.

இப்படியாக பலருக்கும் போராட்டமாகி போன இன்றைய விமான சாகச நிகழ்ச்சியில், சுமார் 230 பேருக்கு மயக்கம் ஏற்பட்டதாகவும், அதில் 93 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படிருப்பதாகவும் தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர்களில் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது பெரும்சோகமாக அமைந்துள்ளது.

விமான சாகச நிகழ்ச்சி

இந்தளவுக்கு சென்னை ஸ்தம்பித்தது ஏன் என்பது பற்றியும், போக்குவரத்து நெரிசலுக்கு காரணம் என்ன என்பது பற்றியும் பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. மத்திய அரசு மாநில அரசோடு இணைந்து செயல்படவில்லை என அதிமுக குற்றஞ்சாட்டியுள்ள நிலையில், தெற்கு ரயில்வே போதிய ரயில்களை இயக்கவில்லை என்ற விமர்சனமும் எழுந்தது.

அதற்கு விளக்கம் அளிக்கும் வகையில், ‘விமான சாகசத்தையொட்டி இன்று 4.30 மணி வரை 3 லட்சம் பேர் பறக்கும் ரயிலில் பயணித்துள்ளனர்; பறக்கும் ரயில் சேவையை வழக்கமாக 55 ஆயிரம் பேர் தினசரி பயன்படுத்துவார்கள். கூட்ட நெரிசலைக் குறைக்க ரயில்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது. ஆகவே வழக்கத்தைவிட இன்று அதிகமானோர் பயணித்துள்ளனர்’ என தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் கூறியுள்ளது. இந்த விளக்கம்,

ரயில் எண்ணிக்கையானது, எத்தனை பேர் வருவார்கள் என்பதை முழுமையாக அறியாமல் உயர்த்தப்பட்டிருப்பதாக விமர்சிக்கப்படுகிறது. எனில், கணிப்பில் அரசுகள் தவறி விட்டனவா என்ற விமர்சனங்களும் எழுந்துள்ளன.

இதுமட்டுமன்றி, வாகன ஓட்டிகள் உரிய இடங்களில் தங்கள் வாகனங்களை நிறுத்ததால்தான் இந்த நெரிசல் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. எது எப்படியாகினும், இன்று நடந்த போக்குவரத்து குளறுபடிகளை ஏற்க முடியாது என்பதே பலரின் வார்த்தையாகவும் உள்ளது.

சென்னை விமான சாகச நிகழ்ச்சி

இவை அனைத்துக்கும் மத்தியில்தான், ‘அதிகம் பேர் நேரில் கலந்துகொண்ட ராணுவ நிகழ்ச்சி’ என்ற அடிப்படையில் லிம்கா புத்தகத்தில் இடம்பெறுகிறது இன்றைய நிகழ்ச்சி.

இது பெருமையானதுதான் என்று நாம் நினைத்தாலும், நான்கு உயிர்கள் பறிபோய் இருப்பதும், 90க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் உள்ளதும் வேதனையையே தருகிறது.