தமிழ்நாடு

சமூக வலைத்தளங்களை முடக்க வேண்டியது தானே?” - நீதிபதிகள் கேள்வி

webteam

“காவல்துறைக்கு உதவி செய்யாத சமூக வலைத்தளங்களை முடக்க வேண்டியது தானே என்று மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

பல்வேறு விசாரணைகளுக்கு சமூக வலைத்தளங்களின் உதவிகளை காவல்துறையினர் நாடி வருகின்றனர். பல வழக்குகளில் சமூக வலைத்தளங்களின் உதவி நாடப்பட்டாலும் தனி நபர் பாதுகாப்பு கொள்கைகள் இருப்பதால் அனைத்து தலகவல்களையும் பகிர முடியாது என சமூக வலைத்தளங்களும் பதில் அளித்து வருகின்றன. 

இந்நிலையில் சமூகவலைத்தளம் மற்றும் மின்னஞ்சல் கணக்குகளுடன் ஆதார் எண்ணை இணைக்கக்கோரி ஆண்டனி கிளமெண்ட் ரூபின் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் மணிகுமார், சுப்ரமணியம் பிரசாத் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணைக்குத் தேவையான ஒத்துழைப்பை சமூக வலைத்தளங்கள் வழங்குவதில்லை என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், சட்டத்தை மதிக்காமலும், விசாரணை அமைப்புக்கு தேவையான ஒத்துழைப்பை கொடுக்காமலும் இருக்கும் சமூக வலைத்தளங்களை ஏன் அனுமதிக்கிறீர்கள்? என்று கேள்வி எழுப்பினர். மேலும் காவல்துறைக்கு உதவி செய்யாத சமூக வலைத்தளங்களை முடக்க வேண்டியது தானே என்று மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்கள் மட்டுமின்றி கூகுள், கோ டாடி, பீம் டெலிகாம் போன்ற நிறுவனங்களும் குறிப்பிட்ட புகாருக்கு உள்ளான நபர்களின் தகவல்களை தர மறுப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பேஸ்புக் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தங்கள் நிறுவனத்திற்கென தனி நபர் பாதுகாப்பு கொள்கைகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், அதன் விவரங்களை விரிவான பதில் மனுவாக தாக்கல் செய்வதாகவும் கூறினார். அதனைப் பதிவு செய்த நீதிபதிகள், 3 வார கால அவகாசம் வழங்கி உத்தரவிட்டனர். மேலும் வழக்கு குறித்து ட்விட்டர் நிறுவனமும் பதில் அளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.