தமிழ்நாடு

பொள்ளாச்சி கொடூர வழக்கை சிபிஐக்கு மாற்றியது ஏன்? - அரசாணையில் விளக்கம்

பொள்ளாச்சி கொடூர வழக்கை சிபிஐக்கு மாற்றியது ஏன்? - அரசாணையில் விளக்கம்

webteam

பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கை விசாரிப்பதில் தொழில்நுட்ப ரீதியாக பல்வேறு சிக்கல்கள் இருப்பதால் சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைத்துள்ளதாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஃபேஸ்புக் மூலம் பெண்களை ஏமாற்றி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி அதை வீடியோ எடுத்து மிரட்டிய விவகாரம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் திருநாவுக்கரசு உள்பட 4 பேர் சிறையிலடைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டு, அதைத்தொடர்ந்து சிபிஐ விசாரணை தற்போது மாற்றப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், முகநூலை பயன்படுத்தி குற்றங்கள் நடந்திருப்பதால் வழக்கை தொழில்நுட்பரீதியாக விசாரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஃபேஸ்புக் நிறுவனத்திடம் தகவல்களைப் பெற வேண்டி இருப்பதாலும், ஐ.பி (IP) அட்ரஸ்களை ஆராய வேண்டி இருப்பதாலும், வழக்கின் முக்கியத்துவம் கருதி சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைக்கும்படி, தமிழக அரசுக்கு டி.ஜி.பி. கோரிக்கை விடுத்தார். சிறப்பு கவனம் செலுத்த வேண்டியிருப்பதால் வழக்கை சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைக்கும்படி டி.ஜி.பி. கோரியிருந்தார். அதனை ஏற்று பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கை சிபிஐ விசாரிக்க தமிழக அரசு பரிந்துரைத்துள்ளது.