தமிழ்நாடு

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தை பெயர் மாற்றுவது குறித்து தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தை பெயர் மாற்றுவது குறித்து தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

Rasus

மதுரை காமராசர் பல்கலைக்கழகம் என்பதை, காமராசர் பல்கலைக்கழகம் என மாற்றுவது குறித்து தமிழக அரசிடம் உரிய விளக்கம் பெற்றுத் தெரிவிக்குமாறு அரசு வழக்கறிஞருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த முத்து சுப்பிரமணியன் என்பவர், பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், மதுரை காமராசர் பல்கலைக்கழகம் என்ற பெயர், இலக்கண பிழையுடனேயே பயன்படுத்தப்படுவதாக குறிப்பிட்டிருந்தார். எனவே மதுரை என்ற வார்த்தைக்குப்பின் ஒற்று மிகுந்து, மதுரைக் காமராசர் பல்கலைக்கழகம் என மாற்றம் செய்ய உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டு இருந்தது.

இதை விசாரித்த நீதிபதிகள், பாரதிதாசன் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகம், பெரியார் பல்கலைக்கழகம் போன்றவை ஊர் பெயரின்றி அழைக்கப்படும்போது, காமராசர் பல்கலைக்கழகம் மட்டும், மதுரை காமராசர் பல்கலைக்கழகம் என அழைக்கப்படுவது ஏன் என கேள்வி எழுப்பினர். தேசியத் தலைவரான காமராஜரை, ஒரு பகுதிக்குள் சுருக்குவது ஏன் என்றும் அவர்கள் கேள்வியெழுப்பினர்.

மதுரை காமராசர் பல்கலைக்கழகம் என்பதை, காமராசர் பல்கலைக்கழகம் என மாற்றுவது குறித்து அரசிடம் உரிய விளக்கம் பெற்று ஒரு வாரத்திற்குள் தெரிவிக்குமாறு அரசு வழக்கறிஞருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், தவறும் பட்சத்தில் நீதிமன்றமே உரிய உத்தரவை பிறப்பிக்க நேரிடும் என்றும் எச்சரித்தனர்.