திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம், கோவை பாரதியார் பல்கலைக்கழகம், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் நெல்லை மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம் உள்ளிட்ட முக்கிய பல்கலைக் கழகங்களில் பட்டமளிப்பு விழா நடைபெறாததால் பல்கலைக் கழகங்களில் படித்தும் பட்டம் கிடைக்காமல் சுமார் 2 லட்சம் பேர் காத்திருப்பதாக மாணவர் அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன.
இந்நிலையில், ஆளுநர் மாளிகை தரப்பில் கொடுக்கப்பட்ட விளக்கத்தில், ”பாரதியார் பல்கலைக் கழகத்திற்கு இதுவரை துணை வேந்தர் நியமிக்கப்படவில்லை. துணை வேந்தர் நியமிக்கப்பட்டிருந்தால், அவர்கள் தரப்பில் இருந்து பட்டமளிப்பு விழா நடத்தச் சொல்லி வேண்டுகோள் வந்திருக்கும். அதைத் தொடர்ந்து தேதியும் அறிவிக்கப்பட்டிருக்கும். ஆனால், தமிழக அரசு சார்பில் அமைக்கப்பட வேண்டிய தேடுதல் குழு அமைக்கப்படாததால் துணை வேந்தர் நியமிக்கப்படவில்லை. இதற்கு மாநில அரசே பொறுப்பேற்க வேண்டும்.
அதேபோல் கொரோனா காரணமாக பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் பட்டமளிப்பு விழா நடைபெறவில்லை. இது போன்ற காரணங்களால் மொத்தம் 7 பல்கலைக் கழகங்களில் பட்டமளிப்பு விழா நிலுவையில் இருக்கிறது. உதகையில் இருக்கும் ஆளுநர் திரும்பிய உடன் அவரிடம் தேதி கேட்டு, ஜூலை மாதத்தில் இருந்து ஒவ்வொரு பல்கலைக் கழகத்திலும் பட்டமளிப்பு விழா நடைபெறும்” என விளக்கம் அளித்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து பல்கலைக் கழகங்களில் பட்டமளிப்பு விழா தாமதம் ஏன் என்பது குறித்து தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறும்போது... பட்டமளிப்பு விழா தாமதத்திற்கு ஆளுநரே காரணம். 'வடஇந்திய சிறப்பு விருந்தினர்களை அழைத்து வர ஆளுநர் விரும்புகிறார்'; பட்டமளிப்பு விழாவுக்கு மத்திய அமைச்சர்களை அழைத்து வர வேண்டும் என ஆளுநர் நினைக்கிறார். இதனாலேயே தாமதம் ஏற்படுகிறது.
ஆளுநரின் தலையீட்டால் தான் பட்டமளிப்பு விழாவை நடத்த முடியவில்லை என துணை வேந்தர்கள் புகார் அளித்துள்ளனர். 9 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் பட்டம் பெற முடியாமல் உள்ளனர்” என அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.