இடைத்தேர்தல் ஜனநாயக முறைப்படி நடைபெறவில்லை, இதனை தேர்தலை ஆணையம் ரத்து செய்ய வேண்டும் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா பேசினார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிப்ரவரி 27 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது வேட்பாளருக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தேமுதிக சார்பில் போட்டியிடும் ஆனந்தனை ஆதரித்து அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா 3-வது நாளாக பரப்புரை மேற்கொண்டார். அவர், குமலன்குட்டை, சம்பத் நகர், சூரம்பட்டி நால் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது பேசிய அவர், ”மக்களை கூண்டில் அடைத்து வைத்து அவர்களை துன்புறுத்தி கொடுமை செய்து அதன் மூலம் கிடைக்கும் வாக்குகளை வைத்து இந்த ஆட்சியாளர்கள் என்ன சாதிக்கப் போகிறார்கள்? மின் கட்டணம், விலைவாசி பருத்தி மற்றும் நூல் விலைகளை நினைத்தாலே ஷாக் அடிக்கிறது. கரும்புக்கு ஆதார விலை 4 ஆயிரம் ரூபாய், பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் என எந்த தேர்தல் வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை.
இந்த தொகுதி மேம்பட எந்த அமைச்சரும் இங்கு வரவில்லை. தாங்கள் கொள்ளை அடிக்கவே இங்கு வந்துள்ளனர். ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை எனக் கூறி மக்களை ஏமாற்றி 3 நம்பர், சுரண்டல் லாட்டரி நடத்தி ஏழை மக்களின் பணத்தை கொள்ளை அடிக்கிறார்கள், கமிஷன் கலெக்ஷன், கரப்பஷன் எனக் கூறி ஆட்சிக்கு வந்த திமுகவினரும் அதே கமிஷன், கலெக்ஷன், கரப்பஷனைதான் செய்து வருகிறார்கள்.
இளைஞர்கள், பெண்களுக்கு வேலை வாய்ப்பு இல்லாத நிலையில், 81 கோடி ரூபாயில் எழுதாத பேனா எதற்காக வைக்க வேண்டும்? அதற்கு பதிலாக நல்ல கல்வி, மருத்துவத்தை மக்களுக்கு கொடுக்க வேண்டும். ஸ்டாலின்தான் வராரு, விடியல் தர போறார் என சொன்னார்கள், ஆனால் தமிழகம் இருட்டில்தான் உள்ளது. ஜனநாயக முறைப்படி இந்த தேர்தல் நடைபெறவில்லை, தேர்தல் ஆணையம் நியாயமாக இருந்தால் இந்த தேர்தலை ரத்து செய்ய வேண்டும்.
தமிழகத்தில் வீதிக்கு வீதி டாஸ்மாக் கடைகளை திறந்து மக்களை மது போதையிலும், கஞ்சாவுக்கு அடிமையாக்கி தமிழகத்தை போதை தமிழகமாக இரண்டு ஆட்சியாளர்களும் மாற்றி வைத்திருக்கிறார்கள்” என சரமாரியாக குற்றஞ்சாட்டி பேசியிருக்கிறார் பிரேமலதா விஜயகாந்த்.