செய்தியாளர்: மருது பாண்டி
சமக்ர சிக்ஷா அபியான் எனும் ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் கீழ், மத்திய அரசு உரிய நிதியை வழங்கவில்லை என தமிழக அரசு குற்றம்சாட்டி வருகிறது. இதன்படி, தமிழகத்திற்கு முதல் தவணையாக வழங்க வேண்டிய 573 கோடி ரூபாயை மத்திய அரசு இன்னும் விடுவிக்கவில்லை.
நிதியை விரைந்து விடுவிக்கக்கோரி, ஆகஸ்ட் 27ஆம் தேதி பிரதமர் மோடிக்கு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கடிதம் எழுதினார். பின்னர் நேரிலும் சந்தித்து நிதி கோரிய நிலையில், மத்திய அரசு இன்னும் நிதியை விடுவிக்கவில்லை. தேசியக் கல்விக் கொள்கையை, தமிழக அரசு ஏற்காமல் இருப்பதால் தான், சமக்ரா சிக்ஷா திட்டத்துக்கு நிதி வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டை பா.ஜ.க நிர்வாகிகள் மறுத்து வருகின்றனர்.
இந்த நிலையில், மத்திய அரசின் பள்ளி கல்வித்துறை அமைச்சகத்திற்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் புதிய தலைமுறை செய்தியாளர் மருதுபாண்டி பல்வேறு கேள்விகளை எழுப்பி இருந்தார்.
மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட சமக்ரா சிக்ஷா அபியான் கல்விக் கொள்கையை எந்தெந்த மாநிலங்கள் ஏற்றுக் கொண்டுள்ளன? எந்தெந்த மாநிலங்கள் ஏற்கவில்லை என்ற கேள்விக்கு, ’இது கல்வித்துறை சார்ந்த கேள்வி இல்லை’ எனக் கூறி பதில் அளிக்கப்படவில்லை.
2020 - 2024ஆம் நிதியாண்டுகளில் தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறையை மேம்படுத்த மத்திய அரசு எவ்வளவு நிதி ஒதுக்கி உள்ளது என்றும், எவ்வளவு நிதி முன்மொழியப்பட்டது என்றும் கேட்கப்பட்டது. 2020- 2024 வரையிலான 4 ஆண்டுகளில் 7 ஆயிரத்து 508.27 கோடி ரூபாய் முன்மொழியப்பட்டு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
எவ்வளவு நிதி விடுவிக்கப்பட்டுள்ளது? என்ற கேள்விக்கு 7 ஆயிரத்து 199.55 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கபட்டுள்ளது. தற்போது வரை நான்கு ஆண்டுகளில் 308.72 கோடி நிலுவைத் தொகை இருப்பதும் தெரியவந்துள்ளது. 2024 - 2025 வரை சமக்ரா சிக்ஷா அபியான் திட்டத்தை மேம்படுத்துவதற்காக முதல் கட்டமாக எவ்வளவு ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது என்ற கேள்விக்கு அது, நிர்வாக அனுமதியில் இருப்பதாகவும், நிர்வாக ரீதியில் அனுமதி கிடைத்தவுடன் நிதி விடுவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கென கால அவகாசம் கூற இயலாது என்றும் கூறப்பட்டுள்ளது.
2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை நிறுத்தி வைப்பது தொடர்பாக தமிழக கல்வித் துறைக்கு விளக்கக் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளதா என்ற கேள்விக்கு பதில் அளிக்கப்படவில்லை.