பாஜக, இபிஎஸ் புதிய தலைமுறை
தமிழ்நாடு

பாஜகவுடன் கூட்டணி முறிவு அறிவிப்பு: ஜெயலலிதா போல் எடப்பாடி பழனிசாமி நேரிடையாகப் பேசாதது ஏன்?

Prakash J

பாஜகவுடன் கூட்டணி முறிவு: இபிஎஸ் தலைமையில் தீர்மானம்

பாஜகவுடன் இன்று அதிமுக கூட்டணியை முறித்துள்ள நிலையில், அதுகுறித்த வீடியோக்களும் பதிவுகளும் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை - அதிமுகவினருக்கு இடையே சற்று மோதல் போக்கு நிலவி வந்த நிலையில், கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த இந்தக் கூட்டணி, இன்று முடிவுக்கு வந்துள்ளது. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையியில் இன்று (செப்.25) நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், ’பாஜக கூட்டணியில் அதிமுக இல்லை’ என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

jayalalitha

நேரிடையாக பாஜகவை எதிர்த்த ஜெயலலிதா!

அதேவேளையில், அன்றைய பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதா, பாஜக கூட்டணி முறிவு குறித்து ஆக்ரோஷமாகப் பேசியிருந்தார். அதைத் தற்போது அதிமுகவினரே வைரலாக்கி வருகின்றனர். அந்த வீடியோவில், “இந்த நேரத்தில் நான் உங்களுக்கு ஓர் உத்தரவாதத்தை அளிக்கிறேன். முன்பு ஒரு தவறு செய்துவிட்டேன். பாஜகவோடு தேர்தல் கூட்டணி வைத்துக்கொண்டேன். நான் செய்த தவறை ஒப்புக்கொள்ளும் துணிச்சல், தைரியம் எனக்கு என்றைக்கும் உண்டு. அந்த தவறுக்கு பரிகாரமாகத்தான் நானே பாஜக ஆட்சியைத் தவிர்த்தேன். இனி, எந்தக் காலத்திலும் பாஜகவோடு அதிமுக எந்தத் தொடர்பும் வைத்துக்கொள்ளாது” எனப் பேசியுள்ளார். மேலும் அவர் கடந்த 2014 நாடாளுமன்றத் தேர்தலின்போது, ’சிறந்த நிர்வாகி யார்? குஜராத்தைச் சேர்ந்த மோடியா? அல்லது தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்த லேடியா’ எனக் கேள்வியெழுப்பினார்.

அண்ணாமலை - பாஜக கூட்டணி விஷயத்தில் மவுனம் காத்த எடப்பாடி பழனிசாமி

ஆனால், அண்ணாமலை மற்றும் பாஜக கூட்டணி விவகாரத்தில் இன்றைய பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நேரிடையாகக் களத்தில் இறங்காமல் தூதர்களை வைத்தே செயல்படுத்துகிறார் என எதிர்க்கட்சியினர் குற்றஞ்சாட்டி உள்ளனர். அதற்கு உதாரணமாய் அவர்கள் பல சம்பவங்களையும் எடுத்துச் சொல்கின்றனர்.

குறிப்பாக, அறிஞர் அண்ணா - முத்துராமலிங்கத் தேவர் பற்றிய பேச்சுக்குப் பிறகுதான் அண்ணாமலை மீது அதிமுகவினர் கடுமையான கண்டனங்களைப் பதிவுசெய்தனர். ஒருகட்டத்தில் அவரை, மாநிலத் தலைவர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என டெல்லிக்கு தூதுவிட்டனர். தவிர, அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது. ஆனால், இது எதுவும் நடக்கவில்லை.

அண்ணாமலை, இபிஎஸ்

கூட்டணி முறிவு குறித்த முதலில் அறிவித்த ஜெயக்குமார்

மேலும் இந்த விஷயத்தில் எடப்பாடி பழனிசாமி, நேரிடையாகக் களத்தில் இறங்கவில்லை. அதேநேரத்தில் இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்த நிலையில், எடப்பாடி பழனிசாமி நேரிடையாகப் பேசாமல் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதிலளிக்க வைத்தார். அவர்தான் முதலில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை; இதில் எந்த மாற்றமும் இல்லை’ என தெளிவுப்படுத்தினார். ஆனால் இதற்குப் பாஜக தரப்பு, ’மூத்த தலைவர்கள் சொல்வதை எல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது. அதிமுக பொதுச் செயலாளரே சொல்லட்டும்’ என எதிர்வினையாற்றினர். ஆனால், அதற்கு எடப்பாடி எந்தப் பதிலையுமே அளிக்கவில்லை. கடைசிவரை மவுனமாக இருந்துவிட்டார்.

தீர்மானம் நிறைவேற்றிய பிறகும் பேட்டி தராத எடப்பாடி பழனிசாமி!

ஆனால் அறிஞர் அண்ணா விவகாரத்தில், ‘தாம் மன்னிப்பு கேட்க மாட்டேன்’ என அண்ணாமலை தீர்க்கமாக இருந்த நேரத்தில், எடப்பாடி பழனிசாமி தம் தரப்பில் இருந்து டெல்லிக்கு தூதுவர்களாக மூத்த நிர்வாகிகளை அனுப்பிவைத்தார். அதிலும் எடப்பாடி பழனிசாமி கலந்துகொள்ளாதது டெல்லி தலைமையையே கவலைகொள்ளச் செய்ததுடன் கலக்கத்தையும் ஏற்படுத்தியது. பின்னர், அங்கு நடந்த விஷயங்கள் குறித்தும் எடப்பாடி வாய் திறக்கவில்லை. இந்த நிலையில்தான் இன்று, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக - பாஜக கூட்டணி முறிந்துள்ளதாக அக்கட்சியின் சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அத்தீர்மானத்தின் அடிப்படையில் மூத்த தலைவர் கே.பி.முனுசாமியே பேட்டி கொடுத்தாரே தவிர, எடப்பாடி பழனிசாமி பேசவில்லை.

எடப்பாடி பேசாதது குறித்து எதிர்க்கட்சிகள் விமர்சனம்!

ஆனால் ஆலோசனைக் கூட்டத்தின்போது, ‘இனி எந்தக் காலத்திலும் பாஜகவுடன் கூட்டணி கிடையாது; எது வந்தாலும் சந்திப்போம்’ என மா.செக்களிடம் உறுதியளித்ததாகக் கூறப்படுகிறது. இப்படி அவர்களிடம் உறுதியளித்த எடப்பாடி பழனிசாமி, ’ஏன், ஜெயலலிதாபோல் அவர்களை எதிர்த்து தைரியமாக ஊடகங்களிடம் பேச முன்வரவில்லை. ஒருவேளை, டெல்லியைப் பகைத்துக்கொள்ள முடியாமல்தான் இப்படி தன் ஆதரவாளர்களை வைத்துப் பேசவைத்துள்ளாரா, டெல்லியால்தானே ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். கூட்டணி இணைந்தது, அவருடைய ஆட்சி முழுவதுமாக நடைபெற்றது... இதையெல்லாம் அவர் மறந்துவிட்டாரா? இனி, டெல்லி பாஜக என்ன செய்யும்?’ என எதிர்க்கட்சிகள் கடுமையான கேள்விகளை கிளப்பி வருகின்றன.