தமிழ்நாடு

அடையாற்றில் ஆக்கிரமிப்புகளை அனுமதித்தது ஏன்? உயர் நீதிமன்ற கேள்வி

webteam

சென்னை அடையாற்றில் ஆக்கிரமிப்புகளை அனுமதித்தது ஏன் என்பது குறித்து 13 ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய தமிழ‌க அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் வரதராஜபுரம் பகுதியில் ஓடும் அடையாற்றில் ஆக்கிரமிப்பு அதிகம் இருப்பதால் அவற்றை அகற்ற உத்த‌ரவிடக்கோரி ப‌ழனியப்பன் என்பவர்,‌ சென்னை உயர்நீதிமன்றத்துக்கு கடந்த அக்டோபர் மாதம் கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில் கனமழை காரணமாக வரதராஜபுரம் சுற்றுவட்டாரப்பகுதிகள் மழை நீரில் மூழ்கியுள்ளன‌. இதையடுத்து பழனியப்பன் கடிதத்தை தானாக முன்வந்து பொதுநல‌வழக்காக கடந்த 3 ஆம் தேதி உயர்நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றது.‌

இந்த வழக்கு, தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஏன் நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அனுமதிக்கிறீர்கள் என்று நீதிபதிகள் கேள்வியெழுப்பினர்.

இதற்கு பதிலளித்த தமிழக அரசு வழக்கறிஞர் டி.என் ராஜகோபாலன், பருவமழையை கருத்தில் கொண்டு தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகளை தூர்வாரும் பணி நடைபெற்றுள்ளதாக தெரிவித்தார். ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்து வருவதாகவும், 182 ஆக்கிரமிப்புகள் அடையாளம் காணப்பட்டுள்ளன என்றும் குறிப்பிட்ட ‌அரசு தரப்பு ‌வழக்கறிஞர், இதுதொடர்பாக 17 வழக்குகள் தொடரப்பட்டு 9 வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், அதுதொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.

அதனையேற்ற நீதிபதிகள், அடையாற்றில் எத்தனை ஆக்கிரமிப்புகள் உள்ளன, அவற்றை அகற்ற எடுத்த நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை வரும் 13ஆம் தேதி ஒத்திவைத்தனர்.

இந்த வழக்கில், மாநில பேரிடர் மேலாண்மை குழு தலைவர், தலைமைச் செயலாளர், வருவாய்த்துறை முதன்மை செயலாளர், பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர், பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர், ஸ்ரீபெரும்புதூர் வட்டாட்சியர் ஆகியோர் எதிர் மனுதாரர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.