ADSP Vellathurai pt desk
தமிழ்நாடு

இன்று ஓய்வு பெற இருந்த என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் ADSP வெள்ளத்துரை நேற்று இரவு சஸ்பெண்ட் - காரணம் என்ன?

webteam

செய்தியாளர்: ஜெ.அன்பரசன்

தமிழக காவல்துறையில் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் ADSP வெள்ளத்துரை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஓய்வு பெறுவதற்கு ஒரு நாள் முன்பாக தமிழக அரசின் உள்துறை வெள்ளத்துரையை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.

encounter

திருவண்ணாமலை மாவட்ட குற்ற ஆவண காப்பகம் கூடுதல் எஸ்.பி.,யாக பணியாற்றி வரும் வெள்ளத்துரையை, கூடுதலாக ரவுடிகளை கண்காணிக்கும் அதிகாரியாக அரசு நியமித்தது. குறிப்பாக ஸ்ரீபெரும்புதூர் பகுதிகளில் தொழிலதிபர்கள் மற்றும் தொழிற்சாலைகளை மிரட்டி பணம் பறிக்கும் கும்பல்களை கட்டுப்படுத்த நியமிக்கப்பட்டு பணியாற்றி வந்தார்.

கல்லூரி பேராசிரியராக பணியாற்றிய வெள்ளத்துரை பின்னர் அந்த வேலையை விட்டுவிட்டு கடந்த 1997 ஆம் ஆண்டு புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் காவல் நிலையத்தில் முதன்முதலாக உதவி ஆய்வாளராக பணியில் சேர்ந்தார். பின்னர் திருச்சிக்கு மாறுதலாகி பாலக்கரை காவல் நிலையத்தில் 1998 ஆம் ஆண்டு பணிபுரிந்த போது கோ.சி ஜான் என்ற ரவுடி போலீசாரை தாக்கி தப்ப முயன்ற போது துப்பாக்கியால் சுட்டு முதல் என்கவுண்டரை தொடங்கினார்.

துப்பாக்கி

அதன் பின் 2003 ஆம் ஆண்டு சென்னை அயோத்தி குப்பம் வீரமணி என்கவுண்டர், 2004 ஆம் ஆண்டு வீரப்பன் தேடுதல் வேட்டை, மதுரையில் உதவி ஆய்வாளர் ஆல்வின் சுதன் ரவுடிகளால் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் இரண்டு ரவுடிகளை என்கவுண்டர் செய்தார். சுமார் 12க்கும் மேற்பட்ட என்கவுண்டர்களை வெள்ளத்துரை நிகழ்த்தி உள்ளதாக காவவல்துறை வட்டாரங்களில் கூறப்படுகிறது.

ரவுடிகளின் சிம்ம சொப்பனமாக விளங்கிய வெள்ளத்துரை, கடந்த 2013 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 6 ஆம் தேதி சிவகங்கை மாவட்டம் திருப்பச்சேரி பகுதியில் குமார் (எ) கொக்கி குமார் போலீஸ் கஸ்டடியில் இறந்தார். இந்த வழக்கிலும் வெள்ளத்துரையின் பெயர் அடிப்பட்டது. குறிப்பாக உயிரிழந்த கொக்கி குமார் 500 ரூபாய் சுரேஷ் என்பவரிடமிருந்து திருடியதாகவும் அப்போது சிறப்பு உதவி ஆய்வாளர் துரைசிங்கம், குமாரை பிடித்துள்ளார்.

Encounter

இந்த நிலையில் போலீசாரை தாக்கிவிட்டு தப்பிக்க முற்பட்டபோது குழியில் விழுந்து கால் உடல்களில் காயங்கள் ஏற்பட்டு பின்னர் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த குமார் சிகிச்சையிலேயே உயிரிழந்தார். அதன் பின் கொக்கி குமார் உயிரிழந்த வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இந்த நிலையில் ஆய்வாளர் கீதா இறுதி அறிக்கையை நீதிமன்றத்தில் கடந்து 2023 ஆம் ஆண்டு தாக்கல் செய்தார். இந்த வழக்கை காரணம் காட்டி வெள்ளத்துரையை தற்போது சஸ்பெண்டு செய்துள்ளது உள்துறை.

மேலும், 2003 ஆம் ஆண்டு அயோத்திக்குப்பம் வீரமணியை என்கவுண்டரில் வெள்ளத்துரை சுட்ட விவகாரத்திலும் மாநில உள்துறை தற்போது விசாரணை நடத்தி உள்ளது. அந்த ஆண்டு மெரினா காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றிய லாயிஸ்ட் சந்திராவிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இதன் பிறகே சஸ்பெண்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இன்றுடன் அவர், ஓய்வு பெற உள்ள நிலையில், நேற்றிரவு சஸ்பெண்டுக்கான உத்தரவு வெள்ளத்துரைக்கு வழங்கப்பட்டுள்ளது.

Suspend order of Vellaidurai

"இன்றுடன் ஓய்வு பெற்று கொள்வதற்கான பரிந்துரையை காவல்துறை தலைமை அலுவலகத்துக்கு வெள்ளத்துரை அனுப்பி வைத்ததாகவும், ஆனால், அதனை ஏற்றுக்கொள்ளாமல் உள்துறை சஸ்பெண்டு செய்து விட்டதாகவும்" காவல்துறை வட்டாரத்தில் தகவல் வெளியாகியுள்ளது. இது தமிழக காவல்துறை வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது. இந்த சஸ்பெண்டு உத்தரவை எதிர்த்து நீதிமன்றத்தை நாடவும் வெள்ளத்துரை முடிவு செய்துள்ளார். அதற்கான சட்ட ஆலோசனையிலும் அவர் ஈடுபட்டு வருதாக கூறப்படுகிறது.