மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் உள்ள சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதனை, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, கடந்த 11-ஆம் தேதி சந்தித்து பேசினார். இது குறித்து மூத்த வழக்கறிஞர் துரைசாமி என்பவர், ஆளுநர் மாளிகை பொது தகவல் அதிகாரிக்கு தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் பல்வேறு கேள்விகளை எழுப்பி விண்ணப்பித்துள்ளார்.
அதில், ஜெகநாதன், ஆளுநர் ஆர்.என்.ரவியின் நெருங்கிய நண்பரா? ஆளுநர் ரவி, பெரியார் பல்கலைக்கழகத்துக்கு சென்றது அலுவல் ரீதியிலானதா? தனிப்பட்ட முறையிலானதா? துணைவேந்தர் ஜெகநாதனுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதும், அந்த வழக்கில் அவர் கைது செய்யப்பட்டதும் ஆளுநருக்கு தெரியுமா? ஜெகநாதன் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட பிறகு அவரிடம் ஆளுநர் எத்தனை முறை பேசியிருக்கிறார்.. அவர்களின் உரையாடல் என்ன? எனக் கேள்விகளை எழுப்பியுள்ளார்.
மேலும் ஆர்.என்.ரவி தமிழக ஆளுநராக பொறுப்பேற்றபோது எவ்வளவு சொத்துகள் அவருக்கு இருந்தன? தற்போது எவ்வளவு சொத்துகள் உள்ளன? எனவும் கேட்டிருக்கிறார். இதேபோல சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கும் மூத்த வழக்கறிஞர் துரைசாமி தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்விகளை எழுப்பி தகவல் கோரியிருக்கிறார்.
அந்த விண்ணப்பத்தில், ஆளுநர் ஆர்.என்.ரவியும் ஜெகநாதனும் மோசடி வழக்கு குறித்து பேசினார்களா? மோசடியில் ஆளுநருக்கு பங்கு உள்ளதா? ஜெகநாதனுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று ஆளுநர் எவரையேனும் நிர்பந்தித்தாரா? எனவும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.