நெல்லையில் இரண்டு இடங்களில் மகா புஷ்கரம் நடத்த தடை விதிக்கப்பட்டது குறித்து மாவட்ட ஆட்சியரும், இந்து சமய அறநிலைய துறையினரும் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தாமிரபரணி நதியில் அக்டோபர் 12 முதல் 23-ஆம் தேதி வரை புஷ்கரம் விழா நடைபெற உள்ள நிலையில், நெல்லையில் உள்ள தைப்பூசப் படித்துறை, குறுக்குத்துறை ஆகிய இடங்களில் புனித நீராட மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. இந்த உத்தரவை ரத்து செய்து, விழாவை பாதுகாப்புடன் நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்ய உத்தரவிடக் கோரி புலவர் மகாதேவன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
தைப்பூசப் படித்துறையில் புனித நீராட தடை விதித்தது சட்டவிரோதமானது என்றும், நீராடும் பக்தர்களை கட்டுப்படுத்துவதை விடுத்து ஒட்டுமொத்தமாக தடை விதித்தது தவறு என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டது. தாமிரபரணிக் கரையில் 140 இடங்களில் நீராட முடியும் என்பதால் அனைவரும் தைப்பூச படித்துறைக்கு வருவர் எனக் கூறமுடியாது என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதி மகாதேவன், இதுகுறித்து இந்து சமய அறநிலைய துறை, நெல்லை மாவட்ட ஆட்சியர் ஆகியோர் அக்டோபர் 3-ஆம் தேதி பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தார்.