நீல நிறத்தில் ஜொலித்த கடல் அலைகள் web
தமிழ்நாடு

இரவில் நீல நிறத்தில் ஜொலிக்கும் கடற்கரையை பற்றி தெரியுமா? கண்களை கொள்ளைக் கொண்ட திருவான்மியூர் பீச்!

கடந்த வெள்ளிக்கிழமை இரவு, சென்னை திருவான்மியூர் கடற்கரையில், கடல் அலைகள் நீல நிறத்தில் காட்சியளித்ததை மக்கள் வியப்புடன் பார்த்து ரசித்தது மட்டுமில்லாமல் அந்த அழகான நிகழ்வை தங்களுடைய சமூக வலைத்தளப் பக்கங்களில் பகிர்ந்தும் வருகின்றனர்.

PT WEB

கடல் அலைகள் நீல நிறத்தில் ஜொலித்தது ஏன்?

பொதுவாக கடல் என்பது அதிக அளவு உயிரினங்கள் இருக்கின்ற பல்லுயிர் நிறைந்த பகுதி, அதிலும் குறிப்பாக கண்களுக்கு தெரியாத bacteria, fungi, algae போன்ற உயிரினங்கள் அதிகமாக வாழக்கூடிய இடமாகும். கடலில் வாழும் ஒரு செல் உயிரியான டைனோ ப்ளாச்சுலேட்(dinoflagellates), கடல் மின்மினி பூச்சி என்று அழைக்கப்படுகிறது. இது கடலில் உள்ள நீரின் தன்மை மற்றும் அதற்கான ஊட்டச்சத்து சரியான விகிதத்தில் அமையும்போது சூரிய வெளிச்சத்தில் சார்ஜ் செய்து கொண்டு, எப்படி சோலார் விளக்குகள் எரிகிறதோ அதுபோல இருளில் ஒளி வீசுகிறது.

நீல நிற அலைகள்

இந்த ஒரு செல் உயிரியின் உடலில் உள்ள வேதிப்பொருளான லூசிபெரின், லூசிபரேஸ் ஆகியவை ஆக்சிஜனோடு சேரும்போது, ஒளி வெளியாகிறது. இதற்கு பெயர்தான் Bioluminescence. பல வகையில் இந்த உயிரி இருப்பதால், அதைப் பொறுத்து வெளியிடும் நிறங்களும் மாறுபடும். தன்னை பாதுகாத்துக்கொள்வதற்காகத்தான் இந்த பாசி ஒளிர்வதாகச் சொல்லப்படுகிறது.

மீன்கள் இந்த பாசியை சாப்பிட முயலும்போது இந்த பாசி தன்னிடம் இருக்கின்ற அந்த ஒளிர்வைக்காட்டி, மீன்கள் வந்தால் அவற்றை பயமுறுத்தி திசை திருப்ப இந்த ஒரு யுத்தியை பயன்படுத்துவதாகவும் அறிவியலாளர்கள் கூறுகின்றனர். இது போன்ற பாசிகள் கடலில் எப்போதும் இருந்தாலும், அவை அதிகமாகும்போது மட்டுமே இவ்வாறு மிளிருமாம்.

இதுவரை நடந்த இதேபோலான நிகழ்வுகள்..

இதேபோன்ற நிகழ்வு உலகின் பல்வேறு கடற்பகுதியில் நடந்திருக்கிறது. கடந்த வருடம், அக்டோபர் 2023 ECR கடற்கரையில் இந்த நீல ஒளி நிகழ்வு நடந்திருக்கிறது. சென்னையில் இருக்கும் ஒரே ஒளிரும் கடற்கரை இதுதான்.

இதேபோல் உலகில் பல கடற்கரைகள் இரவு நேரத்தில் ஒளிரும் தன்மையுடையவை.., அந்தமானில் உள்ள ராதா நகர் கடற்கரையில் ஹேவ்லாக் தீவு அமைந்திருக்கும் கடலில் இது போல் ஏற்படும்.

நீலநிற அலைகள்

அதேபோல் லட்சத்தீவு பகுதிகளில் உள்ள பங்காரம் கடற்கரையிலும் இப்படி நடக்கும். இங்கு பாசி, ஜெல்லிமீன்களால் இது போன்று நீல நிறத்தில் ஒளிர்வு நிகழ்கிறது.

அதேபோல் கோவாவில் உள்ள பலோலம் கடற்கரையிலும் இது போன்ற அற்புத காட்சி நிகழ்கிறது. உடுப்பியில் உள்ள மட்டு கடற்கரை, மும்பையில் உள்ள ஜூஹு கடற்கரை உள்ளிட்டவை நீல நிறத்தில் ஜொலிக்கும். இரவு நேரத்தில் இதைக் காண நிறைய பேர் வருவதுண்டு. இது போன்ற நிகழ்வுகள் ஜூன் முதல் செப்டம்பர் வரை நிகழும் எனவும் கூறப்படுகிறது.

- இனியா ஃபிராங்க்