தமிழ்நாடு

காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் தப்பிச்சென்ற கார் யாருடையது?: கள ஆய்வில் புதிய தகவல்

காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் தப்பிச்சென்ற கார் யாருடையது?: கள ஆய்வில் புதிய தகவல்

webteam

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைதான காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் தப்பிச்செல்ல பயன்படுத்திய கார் அவருக்கு சொந்தமானது அல்ல என்பது புதிய தலைமுறையின் கள ஆய்வில் அம்பலமாகியுள்ளது. கார் யாருடையது? என்பது குறித்து பார்க்கலாம்.

சாத்தான்குளத்தைச் சேர்ந்த தந்தை, மகன் காவல்துறையினர் விசாரணையில் உயிரிழந்த வழக்கு விறுவிறுப்புக் கட்டத்தை எட்டி வருகிறது. இந்த வழக்கில் சாத்தான்குளம் காவல்நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர் இரவில் சினிமா பாணியில் சேசிங் செய்யப்பட்டு சிபிசிஐடி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். அவர் கார் ஒன்றில் தப்பிச்செல்வதாக கிடைத்த தகவலே இதற்கு காரணம். அந்த கார் குறித்து புதிய தலைமுறை நடத்திய ஆய்வில், கார், ஆய்வாளர் ஸ்ரீதருக்கு சொந்தமானது அல்ல என்பது தெரியவந்துள்ளது. சென்னை முகப்பேரைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் தான் காரின் உரிமையாளர் ஆவார். மருத்துவ தேவைக்காக கடந்த 2017ஆம் ஆண்டு தனது காரை, நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த பாண்டியன் என்பவர் கோயம்பேட்டில் நடத்தி வரும் அடகு கடையில் ஒரு லட்சம் ரூபாய்க்கு அடமானம் வைத்துள்ளார். ஆனால், கந்துவட்டி வழக்கில் பாண்டியன் கைது செய்யப்பட்டதால் அவர் என்ன ஆனார்?, கார் எங்கே சென்றது என்ற விவரம் தெரியாமல் இருந்ததாக சுரேஷ் தெரிவித்தார். 

இந்நிலையில் ஆய்வாளர் ஸ்ரீதர் கைது செய்யப்பட்டதையடுத்து சுமார் 3 ஆண்டுகளுக்கு பின்னர் தனது காரை தொலைகாட்சி வாயிலாக பார்த்ததாக அவர் கூறுகிறார். தந்தை, மகன் சித்ரவதை கொலை தொடர்பான வழக்கில் தனது காரை பயன்படுத்தியதை கண்டு மிகவும் வேதனை அடைந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் பயன்படுத்திய கார் எப்படி அவருக்கு சென்றது, அடமானத்திற்கு பெற்ற காரை பாண்டியன் கூடுதல் வாடகைக்கு வழங்கினாரா? அல்லது உரிமையாளருக்கு தெரியாமல் மோசடியாக கார் விற்பனை செய்யப்பட்டதா என்பது விசாரணையில் தான் தெரிய வரும் என விசாரணை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 ஆய்வாளர் ஸ்ரீதர் தப்பிக்க பயன்படுத்திய கார் அவருடையதல்ல என்பது புதிய தலைமுறையின் கள ஆய்வில் தெரியவந்த நிலையில், காரின் உரிமையாளர் சுரேஷ்-க்கு சிபிசிஐடி சம்மன் அனுப்பியுள்ளது. திங்கட்கிழமை நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு சிபிசிஐடி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது