துற்போது அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் மின்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை ஆகிய இரண்டு துறைகளும் இருக்கின்றன. இந்நிலையில், அவருக்கு வரும் 28ஆம் தேதி வரை நீதிமன்ற காவலுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து அவரிடம் இருக்கும் துறைகள் வேறு அமைச்சர்களிடம் ஒப்படைக்கப்படுமா அல்லது முதலமைச்சரே கூடுதலாக இந்த துறைகளை கவனிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த விஷயத்தில், நிதித்துறை அமைச்சர் தங்கத்தென்னரசிடம் கூடுதலாக மின்சாரத்துறையையும், ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமியிடம் கூடுதலாக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையை கொடுக்கவும் அரசு முடிவு செய்திருப்பதாக சொல்லப்படுகிறது.
இதிலேயே, மதுவிலக்கு துறையை மட்டும் ஐ.பெரியசாமிடம் ஒப்படைத்துவிட்டு ஆயத்தீர்வைத் துறையை செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை அமைச்சரான மு.பெ.சாமிநாதன் வசம் கூடுதலாக ஒப்படைக்கலாமென அரசு முடிவெடுத்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
தற்போதைக்கு மதுவிலக்கு - ஆயத்தீர்வைத்துறை ஒரே துறையாக உள்ளது. இதை இரண்டாக பிரித்து, அரசு முடிவெடுக்கக்கூடுமென கருதப்படுகிறது. காரணம், இவர்களில் மு.பெ.சாமிநாதன், கொங்கு மண்டலத்தை சேர்ந்தவர். தற்போது கைதாகியுள்ள செந்தில் பாலாஜி, கொங்கு மண்டலத்தை சேர்ந்தவராவர். ஆகவே அங்கிருந்தே இன்னொரு அமைச்சரை அரசு தேர்வு செய்யலாமென சொல்லப்படுகிறது.
இது குறித்து விரிவாக கட்டுரையில் இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் பார்க்கலாம்.