தமிழ்நாடு

கலைந்த போன சுபஸ்ரீயின் ‘கனடா கனவு’ : உயிரைப் பறித்த பேனர்..!

கலைந்த போன சுபஸ்ரீயின் ‘கனடா கனவு’ : உயிரைப் பறித்த பேனர்..!

rajakannan

சாலையின் நடுவில் வைக்கப்பட்ட பேனரால் இளம்பெண் உயிரை பறிகொடுத்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குரோம்பேட்டை, நெமிலிசேரி பவானிநகர் ரவி என்பவர் மகள் சுபஸ்ரீ (வயது 22). பி.டெக் படித்துள்ள இவர் கந்தன்சாவடியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வருகிறார். தான் வேலை செய்யும் நிறுவனத்தில் இருந்து இன்று இருசக்கர வாகனத்தில் வீட்டிற்குத் திரும்பி வந்துள்ளார். 

துரைப்பாக்கம் – பல்லாவரம் 200 அடி ரேடியல் சாலையில் பள்ளிக்கரணை அருகே சென்று கொண்டிருந்த போது, சாலையின் நடுவே தடுப்புச் சுவரில் வைக்கப்பட்டிருந்த விளம்பர பேனர் சுபஸ்ரீயின் மீது விழுந்துள்ளது. பின்னால் வந்து கொண்டிருந்த தண்ணீர் லாரி, நிலை தடுமாறி விழுந்த சுபஸ்ரீயின் மீது மோதிவிட்டது. இரண்டு கைகளின் மீதும் லாரியின் சக்கரம் ஏறி இறங்கி விட்டது. தலையில் பலத்த காயம். 

அருகிலுள்ள பள்ளிக்கரணை காமாட்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சுபஸ்ரீ சிறிது நேரத்தில் இறந்து விட்டார். உடல் பிரேதப் பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் உள்ளது. சென்னை மெளண்ட் போக்குவரத்துப் புலனாய்வு காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். 

கோவிலம்பாக்கத்தில் அதிமுக பிரமுகரின் மகன் திருமண நிகழ்ச்சிக்காக சாலை தடுப்புச் சுவரின் நடுவே வரிசையாக ஏராளமான பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. உரிய அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த அந்த பேனர்களில் ஒன்றுதான் சுபஸ்ரீ மீது வீழ்ந்து அவரது உயிரிழப்புக்கு காரணமாக அமைந்துவிட்டது.

உயிரிழந்த சுபஸ்ரீ, வேலை விஷயமாகவோ அல்லது மேல்படிப்பு விஷயமாகவோ கனடா செல்ல திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதற்கான தேர்வினை அவர் எழுதியுள்ளதாக தெரிகிறது. ஆனால், விதிகளை மீறி வைக்கப்பட்ட பேனர் அவரது கனடா கனவை கலைத்துவிட்டது. இந்த கொடூரமான மரணம் அவரது குடும்பத்தினர், நண்பர்களை பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.