கோவையில் மென்பொறியாளர் ரகுபதி விபத்தில் உயிரிழந்ததையடுத்து சாலையில் ரகுவை கொன்றது யார்? என ஆங்கிலத்தில் எழுதியது தொடர்பாக இரண்டு இளைஞர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.
கோவையில் கடந்த 25ம் தேதி மென்பொறியாளர் ரகுபதி என்பவர் அவிநாசி சாலையில் நடைபெற்ற விபத்தில் உயிரிழந்தார். அதிமுகவினர் வைத்த பேனர் மூங்கிலில் மோதியதாலேயே அவர் உயிரிழந்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் லாரி மோதியதாலேயே ரகுபதி உயிரிழந்ததாக காவல்துறை விளக்கமளித்தது.
இதற்கிடையில் விபத்து நடந்த பகுதியில் சாலையில் who killed raghu என ஆங்கிலத்தில் எழுதப்பட்ட காட்சி சமூக வலைதளங்களில் வைரலானது. இதை எழுதியது யார் என்பது குறித்து தெரியாத சூழலில் தற்போது கோவை சின்னியம்பாளையம் பகுதியை சேர்ந்த வருண் மற்றும் பிரசாந்த் ஆகியோரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்கள் எந்த அரசியல் அமைப்பையும் சாராதவர்கள் என்றும் அதே பகுதியை சேர்ந்த ரகுபதி உயிரிழந்த ஆதங்கத்தில் சாலையில் எழுதிவிட்டதாகவும் கூறப்படுகிறது. பீளமேடு காவல்நிலையத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.