சங்கரராமன் கொலைவழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டால் யார் கொலை செய்தது என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
காஞ்சி வரதராஜ பெருமாள் கோவில் மேலளாராக இருந்த சங்கரராமன் கடந்த 2004 ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். காஞ்சி மடாதிபதி ஜெயந்திரர் உள்ளிட்ட 21 பேர் மீது விஷ்ணு காஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இந்த வழக்கு உச்சநீதிமன்ற உத்தரவுப்படி புதுச்சேரி நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது அதன் அடிப்படையில் புதுச்சேரி நீதிமன்றம், 2013ஆண்டு நவம்பர் மாதம் 21 பேரையும் விடுவித்து உத்தரவிட்டது. இதனிடையே தங்களை வழக்கில் இருந்து விடுவிக்க நீதிபதியிடம் ஜெயேந்திரர் பேசியது தொடர்பான தொலைபேசி உரையாடல் வெளியானது.
இது தொடர்பாக கொடுக்கப்பட்ட புகாரை சைபர் கிரைம் போலீசார் விசாரிக்க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் விசாரித்த சைபர் கிரைம் போலீசார் தாக்கல் செய்த அறிக்கையில், புதுச்சேரி மாவட்ட நீதிபதியாக இருந்த ராஜசேகர், ஜெயேந்திரரிடம் பேசியதாக தெரிவித்தனர். இந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு 5 ஆண்டுகளாகியும் எந்த முன்னேற்றமும் ஏற்படாத நிலையில், வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று மணிகண்டன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கிருபாகரன், பார்த்திபன் ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, இவ்வளவு பெரிய கொலை சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்ட 21பேரும் விடுவிக்கப்பட்டார்கள் எனில் குற்றவாளி யார் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து வழக்கை நடத்திய அரசு ஏன் மேல்முறையீடு செய்யவில்லை என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
புதுச்சேரி அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இதுதொடர்பாக, ஏற்கனவே உயர்நீதின்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டதாகவும், அப்போது பிழைகள் இருப்பதாக மனு திருப்பி அனுப்பப்பட்டுவிட்டது என்றும் தெரிவித்தார். அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், புதுச்சேரி உள்துறை செயலாளரிடம் விளக்கம் பெற்று தெரிவிக்கும்படி கூறி வழக்கை நாளைக்கு ஒத்திவைத்தனர்.