உயிரிழந்த ரவுடி துரை pt web
தமிழ்நாடு

புதுக்கோட்டை| 70 வழக்குகள்.. என்கவுன்ட்டரில் ரவுடி துரை சுட்டுக்கொலை! ஸ்பாட்டில் நடந்தது என்ன?

PT WEB

41 வயதான துரைசாமி, ஒரு சரித்திர பதிவேடு குற்றவாளி.. காவல்துறையினரைத் தாக்கி தப்ப முயன்ற இவரை காவலர்கள் ஏற்கனவே காலில் சுட்டுபிடித்த நிகழ்வு நடந்திருக்கிறது. புதுக்கோட்டையில் மீண்டும் அவரை பிடிக்க முயன்ற போது என்கவுன்ட்டரில் போலீசார் சுட்டுக் கொன்றனர்.

என்கவுன்ட்டரில் சுடப்பட்ட திருச்சி எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்த துரை என்கிற துரைசாமி மீது 70 வழக்குகள் உள்ளன. 4 கொலை வழக்குகளில் ஒன்றில் விடுதலை செய்யப்பட்டார். 3 கொலை வழக்குகள் இன்னும் நிலுவையில் இருக்கின்றன. கொலை முயற்சி, வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட 70 வழக்குகள் இவர் மீது இருக்கின்றன. தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலில் உள்ள இவர் மீது திருச்சியில் மட்டுமே 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் இருக்கின்றன.

2023 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் திருச்சி உய்யக்கொண்டான் கரையில் காவல்துறையினர் இவரை விரட்டிப் பிடிக்கும் பொழுது தப்பியோடியதால் அப்போதைய திருச்சி மாநகர கண்டோன்மென்ட் உதவி ஆணையர் சுட்டுப் பிடித்தார். அப்போது இவரது தம்பி சோமசுந்தரமும் காலில் சுடப்பட்டு பிடிக்கப்பட்டார். சோமசுந்தரம் தற்போது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

2018 ஆம் ஆண்டு தொழில் போட்டியில் வாசு என்பவரை திருச்சி அரசு மருத்துவமனை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட வண்ணாரப்பேட்டை பகுதியில் கொலை செய்ததாக துரை மீது குற்றச்சாட்டு உள்ளது. 2022 ஆம் ஆண்டு நார்த் டி பாஸ்கர் வலதுகரமான இளவரசன் என்ற ரவுடியை புதுக்கோட்டை கணேஷ் நகர் பகுதியில் வைத்து கொலை செய்த புகாரும் துரை மீது இருக்கிறது.

இந்த நிலையில்தான், புதுக்கோட்டை வம்பன் காட்டுப்பகுதியில் அவர் பதுங்கியிருந்த தகவல் அறிந்து காவல்துறையினர் பிடிக்க முயற்சித்தபோது தாக்கிவிட்டு தப்ப முயன்றதாகவும், அப்போது காவல்துறையினர் சுட்டதில் துரை உயிரிழந்ததாகவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்பாட்டில் நடந்தது என்ன?

ஆலங்குடி காவல் ஆய்வாளர் முத்தையன் தலைமையில் உதவி ஆய்வாளர் மகாலிங்கம் காவலர்கள் யாகநேசன், பாரதி இக்நேசிய சிங் ஆகிய ஐந்து பேரும் வம்பன் காட்டுப்பகுதிக்குள் பதுங்கி இருந்த ரவுடி துறையை பொதுமக்களின் தகவலின் பேரில் பிடிக்க முயன்ற போது இந்த என்கவுண்டர் சம்பவம் நடைபெற்றுள்ளது.

ரவுடி துரை பட்டா கத்தியால் வெட்டியதில் ஆலங்குடி காவல் நிலையத்தில் பணியாற்றும் உதவி ஆய்வாளர் மகாலிங்கத்திற்கு கையில் காயம் ஏற்பட்டுள்ளதாக அவர் ஆலங்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிகிச்சை பெற்று வரும் மகாலிங்கத்தை திருச்சியில் மனோகர் சந்தித்து ஆறுதல் கூறிவிட்டு சென்றுள்ளார்.

எதற்காக இந்த என்கவுண்டர் என்று பின்னர் செய்தியாளர்களை சந்தித்து கூறுவதாக டிஐஜி மனோகர் தெரிவித்துள்ளார். இருப்பினும், “ரவுடி துரையை ஆலங்குடி காவல் நிலைய ஆய்வாளர் முத்தையன் துப்பாக்கியால் சுட்டுள்ளார். முதலில் எச்சரிக்கை விடுப்பதற்காக வானத்தில் ஒரு முறையும் அவர் உடல் மீது இரண்டு முறையும் துப்பாக்கியால் ஆய்வாளர் முத்தையன் சுட்டுள்ளார்” என்று அவர் தெரிவித்தார்.