கோவாக்சின் தடுப்பூசி உற்பத்திக்கு பிற மருந்து நிறுவனங்களுக்கு அழைப்பு விடுப்பதில் மத்திய அரசு நீண்ட தாமதம் செய்துள்ளதாக முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது குறித்து ட்விட்டரில் அவர் சில பதிவுகளை இட்டுள்ளார். கோவாக்சின் தடுப்பூசியை பிற மருந்து நிறுவனங்களும் உற்பத்தி செய்ய அனுமதிக்க வேண்டும் என கடந்த 4 வாரங்களுக்கு முன்பே மத்திய அரசை காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியதாக ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இந்த 4 வார தாமதத்தால் எவ்வளவு உயிர்கள் பறிபோயிருக்கும் என்றும் அதற்கு யார் பொறுப்பேற்க போகிறார்கள் என்றும் ப.சிதம்பரம் வினவியுள்ளார்.
வெளிநாடுகளில் இருந்து தடுப்பூசிகளை இறக்குமதி செய்வதில் இன்னும் தாமதம் நீடிப்பது ஏன் எனவும் சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்கிடையே இந்தியாவில் தடுப்பூசி தட்டுப்பாடு இன்னும் 2 மாதங்களில் நீங்கி தாராளமாக கிடைக்கத் தொடங்கும் என டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் ரந்தீப் குலேரியா தெரிவித்துள்ளார். கோவாக்சின் தடுப்பூசி உற்பத்தி செய்ய விரும்பும் மருந்து நிறுவனங்களுக்கு மத்திய அரசு நேற்று முன்தினம் அழைப்பு விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது