பங்காரு அடிகளார் புதிய தலைமுறை
தமிழ்நாடு

'ஆதிபராசக்தி ஆலயத்தில் கிறிஸ்துமஸ்'.. யார் இந்த பங்காரு அடிகளார்.. அவர் சாதித்தது என்ன?

Angeshwar G

ஆன்மிகத்தில் பல புதுமைகளை புகுத்தி சீர்திருத்தங்களுக்கு அடிகோலியவர் பங்காரு அடிகளார். பாமர மக்களுக்கு எளிமையான பக்தி மார்க்கத்தை காட்டியவர் என்ற பெருமை பங்காரு அடிகளாருக்கு உண்டு. குறிப்பாக ஆன்மீக உலகில் ஆண்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில், அதில் தலைகீழ் மாற்றத்தை கொண்டு வந்தவர் பங்காரு அடிகளார்.

பெண்களுக்கு ஆன்மீக ரீதியில் சில உரிமைகள் மறுக்கப்பட்டு வந்த நிலையில் அந்த நிலையை மாற்றியவர் இவர். பெண்கள் கருவறைக்குள் சென்று வழிபட இவர் வழி செய்தது மிகப்பெரிய ஆன்மீக புரட்சியாக பார்க்கப்படுகிறது. பெண்கள் மாதவிடாய் காலங்களில் கூட குளித்துவிட்டு கோயில் கருவறையில் வழிபட அனுமதித்தவர் பங்காரு அடிகளார்.

ஆன்மீகம் என்பது குறிப்பிட்ட மதம் மட்டும் சார்ந்தது அல்ல எனக்கூறி ஆதிபராசக்தி ஆலயத்தில் கிறிஸ்துமஸ் போன்ற பிற மத கொண்டாட்டங்களையும் நடத்தி சமூக நல்லிணக்கத்திற்கு அவர் பாதை அமைத்தார்.

1941-ஆம் ஆண்டு மேல்மருவத்தூரில் எளிய குடும்பத்தில் பிறந்தவர் பங்காரு அடிகளார். இவரது இயற்பெயர் சுப்பிரமணி என்பதாகும். சிறு வயதிலேயே ஆன்மிகத்தினால் ஆட்கொள்ளப்பட்ட இவர் முதலில் ஆசிரியப ்பணியைத்தான் மேற்கொண்டிருந்தார்.

1966-இல் மேல்மருவத்தூரில் இவர் போட்ட விதை ஆதிபராசக்தி சித்தர் பீடம் என்ற பெயரில் இன்று மாவட்ட, மாநில எல்லைகளை கடந்து பல நாடுகளிலும் கிளை பரப்பி ஆலமரமாய் உயர்ந்து நிற்கிறது. ஒரு தாய் .. ஒரு மனித நேயம் என்பதே இந்த அமைப்பின் தாரக மந்திரமாகும்.

கருவறையில் தொண்டு செய்யும் போது நீ என்னிடம் வருகிறார்.. கழிவறையில் தொண்டு செய்யும் போது நான் உன்னிடம் வருகிறேன் என்பது இவரது அமுதமொழிகளில் ஒன்றாகும். சாதி, மத, இன, மொழி, சமூக அந்தஸ்து என எந்த வேறுபாடுகளுமின்றி சமமாக அரவணைத்தது இந்த அமைப்பு என்பது அதன் தனிச்சிறப்பு.

ஆன்மிகத்துடன் தனது பணிகளை நிறுத்திக்கொள்ளாமல் சமூகசேவைகளிலும் ஈடுபட்டவர் பங்காரு அடிகளார். இவர் உருவாக்கிய கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் இன்றும் பல்லாயிரக்கணக்கானோருக்கு பலன் அளித்து வருகின்றன. 40 ஆண்டு ஆன்மீக சேவைகளை கவுரவிக்கும் விதமாக 2019ஆம் ஆண்டில் பங்காரு அடிகளாருக்கு பத்மஸ்ரீ விருது அளித்து கவுரவித்தது மத்திய அரசு. தமிழ்நாட்டு மண் ஆன்மீகத்திலும் முற்போக்கானது என்பதை உலகிற்கு உணர்த்தியவர் பங்காரு அடிகளார், அவரது மறைவு குறிப்பிட்ட மண்ணுக்கோ மதத்துக்கோ இழப்பு என்பதை விட மனித குலத்திற்கே இழப்பு என்பதே நிதர்சனமான உண்மை.