தமிழ்நாடு

யார் இந்த அரிசி ராஜா ?

jagadeesh

யானை. முல்லை நிலத்தின் முடிசூடா மன்னன். உலகின் மிகப்பெரிய உயிரினம். களிறு வனஉயிரினம் மட்டுமல்ல, அது வனத்தை வளமாக வைத்திருக்கும் உழவன். வீறுநடை போட்டு காட்டைக் காக்கும் காவலன். கருநிற பெருயானைகள் மனிதர்களுக்கு மகிழ்ச்சியையும் ஆசியையும் வழங்கும். ஆனால் ஆனைமலை அடிவாரத்தில் வாழும் மக்களின் கண்களில் கண்ணீரை வரவைத்துவிட்டது ஒரு காட்டு யானை. அது அரிசிராஜா. 27 வயது அரிசி ராஜாவுக்கு இந்தப்பெயர் எப்படி வந்தது தெரியுமா ? ஊருக்குள் புகுந்து அரிசியை உண்டதால் தான்.

பிற யானைகளைப் போல காட்டுக்குள் சுற்றிக் கொண்டிருந்த அரிசி ராஜா, 2017-ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதன்முதலில் ஊருக்குள் இறங்கியது. பொள்ளாச்சி அருகேயுள்ள வெள்ளலூருக்குள் நுழைந்த அரிசிராஜா, 4 பேரை மிதித்துக் கொன்றது. அழையா விருந்தாளியான அரிசி ராஜாவை கும்கிகள் மற்றும் மயக்க ஊசியின் உதவியுடன் டாப்சிலிப் வனத்துக்குள் அனுப்பி வைத்தது வனத்துறை. சில மாதங்கள் காட்டுக்குள் சுற்றிய அரிசி ராஜா 2017-ஆம் ஆண்டு இறுதியில் மீண்டும் ஊருக்குள் புகுந்தது. இம்முறை அது கால் வைத்த இடம் சேத்துமடை. அங்கு ஒருவரின் உயிரை பறித்த பின் மீண்டும் வனத்துக்குள் அனுப்பட்டது. 

இரண்டாவது முறை என்பதால் அடர் வனத்துக்குள் அனுப்பி வைக்கப்பட்டது அரிசி ராஜா. அதன்பின் 18 மாதங்கள் வனத்துக்குள் வலம் வந்த அரிசி ராஜா 2019-ஆம் ஆண்டு மே மாதம் நவமலை என்னுமிடத்திற்குள் நுழைந்து 6 வயது சிறுமி உள்பட இரண்டு பேரின் உயிரை இரக்கமின்றி பறித்தது. மூன்றாவது முறையும் அரிசி ராஜாவை வனத்துக்குள் விரட்டியத்தனர். 5 மாதங்களுக்குப்பின் கடந்த சனிக்கிழமை அர்த்தநாரிபாளையம் என்னுமிடத்திற்கு வந்த அரிசி ராஜா, ராதாகிருஷ்ணன் என்ற விவசாயியை கொன்றது. 

அரிசி ராஜாவால் இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர். அதுமட்டுமல்ல. வீடுகளையும் விளை நிலங்களையும் சேதப்படுத்துவது அரிசி ராஜாவின் வாடிக்கை. இப்படி பொள்ளாச்சி சுற்றுவட்டார மக்களை பாடாய்படுத்திய அரிசி ராஜா தற்போது காட்டுக்குள் பதுங்கியுள்ளது. திங்கள்கிழமை காலை வனத்தில் இருந்து வெளியே வந்த அரிசி ராஜா வனத்துறையினரை கண்டதும் காட்டுக்குள் ஓடிவிட்டது. அதன்பின் அது வெளியே வரவே இல்லை. ஊருக்குள் வந்தால் தம்மைப் பிடித்துவிடுவார்கள் என்பதால் காட்டுக்குள்ளேயே ஒளிந்திருக்கிறது. இவ்வளவு புத்திசாலியான அரிசிராஜா வனத்துறையினரிடம் சிக்குமா? என்பதை பொறுத்திருந்ததுதான் பார்க்க வேண்டும்.