புதிய தலைமுறைக்காக ராஜ தேவேந்திரன்
திரைப்படத்தின் மூலம் தங்களுக்கு கிடைக்கும் ரசிகர்கள் படையை, தொண்டர் படையாக மாற்றிய உதாரணங்கள் தமிழ்நாட்டில் ஏராளம்.
நாடகத்தில் இருந்து திரைப்படத்துறையில் அறிமுகமான எம்.ஜி.ஆர்., ஒரு கட்டத்தில் திமுகவின் சிந்தனைகளை திரைப்படத்தில் கூறிவந்தார். அறிஞர் அண்ணாவின் அன்புத் தம்பிகளில் ஒருவராக இருந்த எம்.ஜி.ஆர், ‘காஞ்சியில் நான் படித்தேன் நேற்று... அதை நான் உனக்கு சொல்லட்டுமா இன்று’ என தனது படத்தில் பாடல் வைத்தார். கருணாநிதியுடன் ஏற்பட்ட மோதல் போக்கால், 1972ல் அண்ணாவின் பெயரை சேர்த்து அதிமுகவை தொடங்கினார். அவர்தான் அரசியல் கட்சி தொடங்கிய முதல் நடிகர். முதலமைச்சர் அரியணை ஏறியதும் இன்றுவரை அவர்தான்...
லட்சிய நடிகர் என்ற பட்டத்துடன் வலம் வந்த எஸ்.எஸ். ராஜேந்திரன், எஸ்.எஸ். ஆர். புரட்சிக் கழகம் என்ற கட்சியை துவக்கினார். பின்னாளில் தனது கட்சியை அதிமுகவோடு இணைத்துவிட்டார்.
எம்.ஜி.ஆர் கட்சி தொடங்கிவிட்டார், எஸ். எஸ்.ஆர் தொடங்கிவிட்டார் என்ற ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப, நடிகர் திலகம் சிவாஜியும் கட்சித் தொடங்கினார். கருணாநிதியுடன் நட்பு கொண்டவராக இருந்தாலும், 20 ஆண்டுகளுக்கு மேல் காங்கிரஸ் கட்சியில் இருந்தவர் சிவாஜி கணேசன்... தான் சிரித்தால் சிரிக்கும், அழுதால் அழும் ரசிகர்களை கொண்ட அவர், அரசியலுக்கும் தன்னோடு அவர்கள் வருவார்கள் என நினைத்திருக்கலாம். தமிழக முன்னேற்ற முன்னணி என்ற கட்சியை 1988ஆம் ஆண்டு துவங்கினார். ஓராண்டிலேயே, ஜனதா தளத்துடன் இணைத்துவிட்டு, கருணாநிதியின் நண்பராக மட்டுமே இருந்தார்.
இந்த நிலையில், எம்.ஜி.ஆரின் மறைவுக்கு பிறகு, அவரின் கலையுலக வாரிசான இயக்குநர் கே.பாக்யராஜ் கட்சி தொடங்கினார். எம்.ஜி.ஆர். ரசிகர்கள், அனுதாபிகள் வருவார்கள் என நினைத்திருக்கலாம்... இதனால், 1989 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர். மக்கள் முன்னேற்ற கழகம் என்ற பெயரில் கட்சிக்கு பெயர் வைத்தார். ஆனால், 2 ஆண்டுகளில் அதிமுகவோடு இணைத்துவிட்டு, பின்னர் அரசியலில் இருந்து விடுபட்டார்.
திமுகவில் எம்.எல்.ஏ.வாகவும், நட்சத்திர பேச்சாளராகவும் இருந்த டி.ராஜேந்தர், தனது அடுக்குமொழி வசனங்களால் ரசிகர்களை ஈர்த்தவர். 1991ஆம் ஆண்டில் தாயக மறுமலர்ச்சி கழகம் என கட்சி தொடங்கிய அவர், 1996-ல் திமுகவுடன் இணைத்தார். 2004ஆம் ஆண்டு லட்சிய திமுக என்ற கட்சியை தொடங்கியவர், இன்றுவரை நடத்தி வருகிறார்.
முழுக்க முழுக்க தமிழ்ப் படங்களில் மட்டுமே நடித்துவந்த விஜயகாந்த், நடிகர் சங்கத்தை திறம்பட நடத்திக்காட்டியவர். நடிகர்களின் அபிமானி... நாட்டுப்பற்று மிக்கவராக இருந்த அவர், 2005ஆம் ஆண்டு தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்ற கட்சியை தொடங்கினார். வெள்ளந்தி பேச்சும், உரிமையுடன் முன்வைக்கும் கோரிக்கையும், அதட்டல் கேள்வியும் அவருக்கு கைகொடுத்தது. முதலமைச்சராக வந்துவிடுவார் என்ற நிலையில், அதிமுக கூட்டணியில் சேர்ந்து எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்தார். அந்நாளில் திமுக பின்வரிசையில் அமர்ந்தது... விஜயகாந்த் மறைந்தாலும் அவரது கட்சி துடிப்போடு செயல்பட்டு வருகிறது.
இதேபோல், சுப்ரீம் ஸ்டாரான நடிகர் சரத்குமாரும், 2007ஆம் ஆண்டு, கட்சி தொடங்கினார். சமத்துவ மக்கள் கட்சியை தொடங்கி நடத்திய அவர், எம். எல்.ஏ.வாக வெற்றிபெற்றார். ஆனாலும், அண்மையில் தன்னையும், தனது கட்சியையும் பாஜகவுடன் இணைத்துவிட்டார்.
நடிகர் கவுதம் கார்த்திக்கின் தந்தையான நவரச நாயகன் கார்த்திக், ஃபார்வர்டு பிளாக் கட்சியில் இருந்தார். பின்னர் நாடாளும் மக்கள் கட்சி என்ற தனிக் கட்சித் தொடங்கிய அவர், அதனை கலைத்துவிட்டு மனித உரிமை காக்கும் கட்சியை தொடங்கினார்.
தமிழின உரிமைகளுக்காக வலுவாக பேசும் இயக்குநர் சீமான், 2010ஆம் ஆண்டு நாம் தமிழர் கட்சியை தொடங்கினார். இன்றுவரை அனைத்து தேர்தல்களையும் தனியாக சந்தித்து வரும் நாம் தமிழர் கட்சி, இளைய தலைமுறை பட்டதாரிகளை களமிறக்கி களமாடுகிறது... பெரும் துடிப்போடு இயங்கி வரும் கட்சியாகவும் உள்ளது.
அரை நூற்றாண்டுகால திரையுலக வாழ்க்கையை நிறைவு செய்துள்ள கமல்ஹாசன், 2018ஆம் ஆண்டு மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கினார். மக்களின் மனதில் டார்ச் அடித்துவரும் அவருக்கு, அரசியலில் மக்கள் வெற்றியை தருவார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
நாடாளும் எண்ணத்துடன் கட்சி தொடங்கியவர்களில் எம்.ஜி.ஆர் முதலமைச்சரானார். விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவரானார். மற்றவர்களை காலம் அனுமதிக்கவில்லை...
இந்த நிலையில்தான், தனது நடிப்பு மூலம் ரசிகர்களை கவர்ந்த நடிகர் விஜய், பிளிறும் யானைகளை கொண்ட வாகைக் கொடியோடு, அரசியலுக்கு வந்திருக்கிறார்... தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி முதல் மாநில மாநாட்டை கண்டிருக்கும் விஜய், அரசியல் களத்தில் வெற்றிக்கொடி நாட்டுவாரா என்பதை நாளைய தீர்ப்பு சொல்லும்...