மின் கட்டண உயர்வு முகநூல்
தமிழ்நாடு

மின் கட்டணம் உயர்வு! யார் யாருக்கு மின் கட்டணத்தில் மாற்றமில்லை?

PT WEB

தமிழ்நாட்டில் மின் கட்டண உயர்வு யார், யாருக்கு எவ்வளவு உயரும் என்பது குறித்து, தமிழ்நாடு அரசு விளக்கமளித்துள்ளது. அதன்படி, “தமிழ்நாட்டில் 2 கோடியே 47 லட்சம் வீடு மற்றும் குடிசை மின் நுகர்வோர் உள்ள நிலையில், அதில் 1 கோடி நுகர்வோருக்கு மின் கட்டண உயர்வு இல்லை” என தமிழக அரசின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும், இது குறித்த அறிவிப்பில்,

”அனைத்து மின் நுகர்வோர்களுக்கும் 100 யூனிட் வரையிலான விலையில்லா மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும். குடிசை இணைப்புகளுக்கு இலவச மின்சாரம் தொடரும்.

வீட்டு மின் நுகர்வோர்களுக்கு நிலை கட்டணத்தில் இருந்து விலக்கு தொடர்கிறது. குடிசை, விவசாயம், கைத்தறி, விசைத்தறி, வழிபாட்டு தலங்கள், தாழ்வழுத்த தொழிற்சாலைகள் ஆகிய மின் கட்டண பிரிவிற்கு வழங்கப்பட்டு வரும் மின்சார மானியம் தொடர்ந்து வழங்கப்படும்.

இலவச மின்சாரம் தொடரும்

இருமாதங்களுக்கு 200 யூனிட் வரை பயன்படுத்தும் 63 லட்சம் வீட்டு நுகர்வோருக்கு, மின் கட்டணம் 10 ரூபாய் வரை உயரும். இரு மாதங்களுக்கு 300 யூனிட் வரை பயன்படுத்தும் 35 லட்சம் வீட்டு நுகர்வோருக்கு, 30 ரூபாய் வரை மட்டுமே உயரும்.

அதேபோல் 400 யூனிட் வரை பயன்படுத்தும் 25 லட்சம் வீட்டு நுகர்வோருக்கு, 50 ரூபாய் வரையும், 500 யூனிட் வரை மின் நுகர்வு செய்யும் 13 லட்சம் வீட்டு நுகர்வோருக்கு, 80 ரூபாய் வரை மட்டுமே உயரும்.

அதேபோல், 2.19 லட்சம் சிறு, குறு தொழில் மின் நுகர்வோருக்கு யூனிட்டிற்கு 20 காசுகள் மட்டுமே உயரும். விசைத்தறி நுகர்வோர்களுக்கான 1000 யூனிட் இலவச மின்சாரம் தொடரும்.

ஆயிரத்து ஒன்று முதல் 1500 யூனிட் வரை யூனிட்டிற்கு 20 பைசாவும், 1501 யூனிட்டிற்கு மேல் யூனிட்டிற்கு 25 காசுகள் உயரும்.

மின் கட்டண உயர்வு

22.36 லட்சம் சிறு வணிக மின் நுகர்வோருக்கு இரு மாதங்களுக்கு 30 ரூபாய் மட்டுமே உயரும். தாழ்வழுத்த, உயர் மின் அழுத்த தொழிற்சாலைகளுக்கு யூனிட்டிற்கு 35 பைசா உயரும். உயரழுத்த வணிக நிறுவனங்களுக்கு ஒரு யூனிட்டிற்கு 40 பைசா மட்டுமே உயரும். நிலையான கட்டணங்கள் கிலோவாட் ஒன்றுக்கு, மாதத்திற்கு 3 முதல் 27 ரூபாய் மட்டுமே உயரும்” என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.