தமிழ்நாடு

சுழற்றியடித்த சூறைக்காற்று: வேரோடு சாய்ந்த மரம் - இடிந்து விழுந்த சுற்றுச் சுவர்

சுழற்றியடித்த சூறைக்காற்று: வேரோடு சாய்ந்த மரம் - இடிந்து விழுந்த சுற்றுச் சுவர்

webteam

மாண்டஸ் புயல் காரணமாக சென்னை திருவல்லிக்கேணியில் 30 ஆண்டு பழமை வாய்ந்த மரம் விழுந்த விபத்தில் பள்ளியின் சுற்றுச்சுவர், கார்கள், வீடுகள் ஆகியவை சேதமடைந்தன.

மாண்டஸ் புயல் நேற்றிரவு கரையை கடக்கும் என வானிலை மையம் அறிவித்திருந்த நிலையில், பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு சிறப்பாக மேற்கொண்டது. இந்நிலையில், சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஐஸ் ஹவுஸ் முருகப்பன் தெருவில் சென்னை மாநகராட்சி பெண்கள் உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், இந்தப் பள்ளியின் சுற்றுச்சவர் அருகில் 30 ஆண்டு பழமை வாய்ந்த பஞ்சுமரம் 70 அடி நீளத்திற்கு வளர்ந்திருந்தது. இதையடுத்து நேற்று நள்ளிரவு மாண்டஸ் புயல் சூறைக் காற்றால் அந்த மரம் வேரோடு சாய்ந்தது. இதனால் மாநகராட்சி பள்ளியின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. மேலும் அருகே உள்ள வீட்டின் கூரை மீது மரக்கிளைகள் விழுந்ததில் வீடு சேதமடைந்தது.

இதையடுத்து பள்ளியின் அருகே நிறுத்தப்பட்டிருந்த மூன்று கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் பலத்த சேதமடைந்தன. நள்ளிரவு நேரம் என்பதால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. தற்போது மாநகராட்சி அதிகாரிகள் மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.