அபராதம் ச.குமரவேல்
தமிழ்நாடு

வேலூரில் வீட்டில் இருந்த பைக்கிற்கு திருவண்ணாமலையில் அபராதமா?! உரிமையாளர் அதிர்ச்சி குற்றச்சாட்டு!

வேலூரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்துக்கு, திருவண்ணாமலை போக்குவரத்து காவல் துறையினரால் அபராதம் விதிக்கப்பட்டதாக வந்த குறுஞ்செய்தியால் அதிர்ச்சி.

PT WEB

வேலூர் மாவட்டம் தொரப்பாடி பகுதியைச் சேர்ந்தவர், வன உயிரியல் ஆர்வலர் முகிலன்(32). இவர் தனியார் வங்கி மேலாளராகவும் பணிபுரிந்து வருகிறார்.

அபராதம்

இவரின் இருசக்கர வாகனம் தொரப்பாடியில் உள்ள வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், திருவண்ணாமலை போக்குவரத்து காவல் துறையினரால் அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

நேற்று இரவு சுமார் 11.33 மணிக்கு அவருடைய செல்போனுக்கு குறுந்தகவல் ஒன்று வந்துள்ளது. அதை எடுத்து பார்த்த முகிலன், அவருடைய பைக்கிற்கு 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதை பார்த்து, திருவண்ணாமலையில் அபராதமா என அதிர்ச்சியடைந்துள்ளார்.

அபராதம்

இந்த சம்பவம் குறித்து முகிலன் கூறுகையில், "நான் திருவண்ணாமலைக்கு சென்று சுமார் ஒன்றரை வருடம் ஆகிறது. வீட்டில் இருந்த வண்டிக்கு எதன் அடிப்படையில் அபராதம் விதித்தார்கள் என்றே தெரியவில்லை. டார்கெட்டை முடிப்பதற்காக ரேண்டமாக நம்பரை தேர்வுசெய்து அபராதம் விதிக்கிறார்கள்" என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.