மதுரைக்கு எய்ம்ஸ் வருமா? வராதா?"எனும் வாசகத்துடன் கூடிய டி-சர்ட் அணிந்து திமுகவினர் மரக்கன்றுகளை நட்டு நூதன முறையில் கண்டனம் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட தோப்பூரில், 2018ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இந்நிலையில், ஜப்பான் நிதி குழுவிடம் இருந்து, நிதி வருவதற்கு தாமதம் ஆவதால் மருத்துவமனை கட்டுமான பணி தாமதப்படுவதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது.
இதனை தொடர்ந்து, திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் இளமகிழன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் இணைந்து மதுரைக்கு எய்ம்ஸ் வருமா? வராதா? எனும் வாசகத்துடன் கூடிய டி-சர்ட் அணிந்துக்கொண்டு எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதற்கு அருகில் உள்ள தோப்பூர் அரசு நுரையீரல் மருத்துவமனை நுழைவுவாயிலில் 70க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டனர்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் இளமகிழன் பேசியபோது. மதுரைக்கு எய்ம்ஸ் வருமா வராதா எனும் வாசகத்துடன் கூடிய பனியனுடன் எங்களது எதிர்ப்புகளை மரக்கன்றுகள் ஊன்றி காட்டுவதாகவும், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மோடி அடிக்கல் நாட்டிச் சென்ற எய்ம்ஸ் மருத்துவமனையில் எந்தவித கட்டுமான பணிகளும் நடைபெறவில்லை எனவும் குற்றம் சாட்டினார்.
மேலும், எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் அமையவில்லை என்றால் தனது பதவியை ராஜினாமா செய்து விடுவேன் என்று கூறிய அமைச்சர் .உதயகுமார், அடிக்கல் நாட்டி எந்த வேலையும் நடைபெறாத நிலையில் ராஜினாமா செய்யவேண்டும் எனவும் தெரிவித்தார். தொடர்ந்து, நாடாளுமன்றத்தில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி எய்ம்ஸ் குறித்து எழுப்பிய கேள்விக்கு, மத்திய அரசு ஜப்பான் மற்றும் அமெரிக்காவிடம் கடன்பெற வேண்டும் என கலர் கலராக ரீல் விடுகின்றனர் என்றும் கூறினார். ஆகையால் இந்த குற்றச்சாட்டுக்கு அமைச்சர் உதயகுமார் பதவி விலக வேண்டும் என்றும் தெரிவித்தார்.