தமிழ்நாடு

தேசியக்கொடி ஏற்றும் போது செல்ஃபோனில் பேசியவருக்கு வித்தியாசமான தண்டனை

webteam

சுதந்திர தினத்தன்று தேசிய கொடி ஏற்றிய போது செல்போனில் பேசிக் கொண்டிருந்த ஆம்பூர் மருத்துவமனை மருத்துவ அலுவலருக்கு நீதிமன்றம் வித்தியாசமான தண்டனை வழங்கியுள்ளது. 

ஆம்பூர் அரசு மருத்துவமனையின் மருத்துவ அலுவலர் கென்னடி கடந்த மாதம் சுதந்திர தினத்தன்று, மருத்துவமனை வளாகத்தில் தேசிய கொடி ஏற்றப்பட்ட போது, செல்போனில் பேசியபடி நின்றிருந்தார். இதுகுறித்து, ஆம்பூர் முன்னாள் நகரமன்ற உறுப்பினர் சுரேஷ்பாபு காவல்நிலையத்தில் புகார் அளித்தார். விசாரணை நடைபெற்று வந்த நிலையில், உயர்நீதிமன்றத்தில் கென்னடி முன் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தார்.

விசாரணை நடத்திய நீதிபதி பி.என்.பிரகாஷ், தேசிய கொடியை அவமதித்த மருத்துவ அலுவலர் கென்னடி செப்டம்பர் 12ஆம் தேதி முதல் ஒரு வாரத்திற்கு தினமும் காலை 10 மணிக்கு தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்த வேண்டும் என உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் காவல்துறையினர் முன்னிலையில் மருத்துவ அலுவலர் கென்னடி தேசிய கொடியை ஏற்றி வைத்து தினமும் மரியாதை செலுத்தி வருகிறார். மருத்துவமனை செவிலியர்கள், மருத்துவர்கள், மருத்துவ ஊழியர்களும் அதில் பங்கேற்றனர்.