பொள்ளாச்சி பாலியல் வழக்கின் விசாரணைக்கு வாட்ஸ் அப் நிறுவனம் சரியாக ஒத்துழைக்கவில்லை என்று காவல்துறையினர் சென்னை உயர்நீதி மன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான திருநாவுக்கரசு, வசந்தகுமார், சதீஷ் குமார், சபரிராஜன் ஆகியோரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை தமிழக சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகிறது. அதேபோல், வழக்கை சிபிஐக்கு மாற்றி தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. அத்துடன் இது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நேற்று இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.மணிக்குமார் மற்றும் சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்ததது. அப்போது காவல்துறையினர் வாட்ஸ் அப் நிறுவனம் இந்த வழக்கில் சரியான ஒத்துழைப்பு அளிக்கவில்லை எனத் தெரிவித்தது. இதனையடுத்து நீதிபதிகள் மத்திய அரசு விசாரணைக்கு ஒத்துழைக்காத ஃபேஸ்புக், வாட்ஸ் அப் மற்றும் ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களை ஏன் தடைசெய்யக் கூடாது என கேள்வி எழுப்பினர்.
இதற்கு மத்திய அரசு தரப்பில், “இன்னும் சில சமூக வலைத்தளங்கள் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் அமைக்கவேண்டிய குறைகளை தீர்க்கும் பொதுதகவல் அதிகாரிகளை நியமிக்கவில்லை” எனத் தெரிவித்தது. இதனையடுத்து நீதிபதிகள் அனைத்து சமூகவலைத்தளங்களுக்கும் ஏன் சட்டங்களை மதிக்காமல் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்பது குறித்து விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டனர். அத்துடன் இந்த வழக்கின் விசாரணையை வரும் வியாழக்கிழமை ஒத்தி வைத்துள்ளனர்.