தமிழ்நாடு

'என்னப்பா பிரியாணில புழு?'- ஊழியரும் அலட்சியமாக நடந்ததாக பிரபல உணவகம் மீது புகார்

'என்னப்பா பிரியாணில புழு?'- ஊழியரும் அலட்சியமாக நடந்ததாக பிரபல உணவகம் மீது புகார்

webteam

கிழக்கு தாம்பரத்தில் சேலம் ஆர்ஆர் பிரியாணிக் கடையில் மட்டன் பிரியாணியில் புழு இருப்பதாக முறையிட்ட வாடிக்கையாளரிடம் புழுவை எடுத்து போட்டுட்டு சாப்பிடுமாறு ஊழியர்கள் அலட்சிய பதிலளித்தாக புகார் எழுந்துள்ளது.

சென்னை அடுத்த தாம்பரத்தை சேர்ந்தவர்களான விக்னேஷ், சுசிந்தர் பாலாஜி, கேபா ஆகியோர் கிழக்கு தாம்பரத்தில் உள்ள சேலம் ஆர்ஆர் பிரியாணி உணவகத்தில் இன்று மூன்று மட்டன் பிரியாணிகளை ஆர்டர் செய்துள்ளனர். இதில், ஒரு மட்டன் பிரியாணியில் புழு ஒன்று இறந்து கிடந்தது தெரியவந்துள்ளது.

இது பற்றி மூவரும் கடை ஊழியர்களிடம் புகார் அளிக்கவே, கத்திரிக்காயில் இருந்து வந்து இருக்கும் புழுவை எடுத்து போட்டு விட்டு சாப்பிடுமாறு அலட்சியமாக பதிலளித்ததாக கூறப்படுகிறது. அதற்குள்ளாக அங்கு சாப்பிட வந்த மற்றவர்களுக்கு பிரியாணியில் புழு இருந்த விஷயம் தெரியவரவே அவர்களும் சாப்பிடாமல் எழுந்து சென்று விட்டனர்.

இந்த பிரச்னைக்கு நடுவிலும் பிரியாணிகளை பார்சல் கட்டி அமோக விற்பனை செய்து கொண்டிருந்தாக அவர்கள் புகார் கூறுகின்றனர். மேலும் வாடிக்கையாளர்களின் நலனை கருத்தில் கொள்ளாமல் லாப நோக்கத்தோடு புழு இருப்பது தெரிந்தும் விற்பனை செய்ததாக மூவரும் குற்றஞ்சாட்டுகின்றனர்.

உணவு பாதுகாப்புத் துறையினர் இந்த உணவகத்தில் உரிய ஆய்வு நடத்த வேண்டும் என்று வாடிக்கையாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.