உலக முதலீட்டாளர் மாநாடு முகநூல்
தமிழ்நாடு

உலக முதலீட்டாளர் மாநாடு; இன்று நடக்கப்போவதென்ன?

சென்னை உலகமுதலீட்டாளர் மாநாட்டில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கலந்து கொள்ள வாய்ப்பிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Angeshwar G

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்று வரும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் அமெரிக்கா, ஜப்பான், ஜெர்மனி, சிங்கப்பூர் உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த முன்னணி நிறுவனங்களின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். தமிழக அரசின் செமி கண்டக்டர் மற்றும் மேம்பட்ட உற்பத்தி கொள்கையை முதலமைச்சர் ஸ்டாலின் இம்மாநாட்டில் வெளியிட்டார்.

உலக முதலீட்டாளர் மாநாட்டில் பியூஷ் கோயல் - மு.க.ஸ்டாலின் - டி.ஆர்.பி.ராஜா

இந்நிலையில், இந்த மாநாட்டின் இலக்கான 5.5 லட்சம் கோடி ரூபாய் இலக்கு முதல்நாளிலேயே எட்டப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் புதிதாக தொழில் தொடங்குவது, முதலீடு செய்தல், தொழில் செயல்பாடுகளை விரிவுபடுத்தல் தொடர்பாக பல்வேறு நிறுவனங்களுடன் 100-க்கும் மேற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளதாக தொழிற்துறை செயலாளர் அருண்ராய் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே தமிழ்நாட்டில் புவிசார் குறியீடு பெற்ற 58 பொருட்கள் மாநாட்டில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் இன்று இரண்டாம் நாள் அமர்வு நடைபெற உள்ளது. பிரான்ஸ், ஜப்பான் நாட்டின் அமர்வுகள் இன்றைய மாநாட்டில் தனித் தனியாக நடைபெறவுள்ளது. மின்வாகனம், விவசாயம் - உணவுத்துறை, எதிர்கால பொறியியல் துறை வளர்ச்சி குறித்து அமர்வுகள் நடைபெற உள்ளன. இன்று அரங்குகளைப் பார்வையிட 45 லட்சம் பேருக்கு குறுஞ்செய்தி மூலம் தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது.

மதியம் 1 மணியளவில் சிறு குறு தொழிலாளர்களின் சந்திப்பு நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இன்றைய முக்கிய விருந்தினராக மஹேந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹேந்திரா பங்கேற்கிறார். ஏராளமான பார்வையாளர்கள், சிறப்பு விருந்தினர்கள், பல்வேறு தொழில்துறை சார்ந்த சிறப்பு விருந்தினர்களும் கலந்துகொள்ள இருக்கிறார்கள்.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் உலக முதலீட்டாளர் மாநாடு நடைபெறும் இடத்திற்கு வர இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் பல்வேறு துறை சார்ந்த நிபுணர்களும் கலந்துகொள்ள உள்ளனர். ஒட்டுமொத்தமாக செய்யப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் எவ்வளவு என்ற விவரம் இன்று மாலை வெளியாக வாய்ப்புள்ளது.

உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024

இன்று மாலை 4.30 மணியளவில் மாநாட்டின் இறுதி நிகழ்வு நடைபெற உள்ள நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க இருக்கிறார். அந்த நிகழ்வில் எவ்வளவு நாடுகள், எந்தெந்த நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் முதலீடு செய்துள்ளனர், தமிழகம் பெற்றுள்ள முதலீடுகள் எவ்வளவு என்ற விபரம் தெரிய வரும்.