செஞ்சி மஸ்தான் PT
தமிழ்நாடு

மருமகன், மகன்.., மஸ்தான்...அடுத்தடுத்த பதவி பறிப்பு... பின்னணி என்ன?

இரா.செந்தில் கரிகாலன்

விழுப்புரம் வடக்கு மாவட்டச் செயலாளராக இருந்த, சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தானை அதிரடியாக அந்தப் பொறுப்பில் இருந்து நீக்கியிருக்கிறது திமுக தலைமை.., அவருக்குப் பதிலாக, வடக்கு மாவட்ட அவைத்தலைவராக இருந்த டாக்டர் சேகரை மாவட்டப் பொறுப்பாளராக நியமித்திருக்கிறது.

minister senji masthan

நாடாளுமன்றத் தேர்தலில் செயல்பாடுகள் சரியில்லை, விக்கிரவாண்டி இடைத் தேர்தலுக்கு வேலை செய்வதற்காக மஸ்தானை நீக்கியிருக்கிறார்கள் எனத் தகவல்கள் வெளியான நிலையில், ’அது எதுவுமே உண்மையான காரணமல்ல. மஸ்தானை பொறுப்பில் இருந்து தூக்குவது முன்பே முடிவு செய்யப்பட்ட ஒன்றுதான்’ என பின்னணியை விவரிக்கிறார்கள் கட்சி வட்டாரத்தில்..

என்ன நடந்தது?

செஞ்சி மஸ்தானின் பதவி பறிப்புக்கு அவரின் மருமகன், மகன் உள்ளிட்ட குடும்பத்தினரின் அரசியல், அதிகாரத் தலையீடுகளே காரணம் எனச் சொல்லப்படுகிறது.., உதாரணமாக, திண்டிவனம் நகராட்சியில் நடந்த சம்பவங்களைக் குறிப்பிடலாம்.

கடந்தாண்டு செப்டம்பர் மாதம் 13 கவுன்சிலர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்தனர். ராஜினாமா கடிதங்களையும் திமுக தலைமைக்கு அனுப்பினர். "திண்டிவனம் நகர்மன்றத் தலைவராகப் பதவி வகிக்கும் நிர்மலா செயல்படாத தலைவராக இருக்கிறார். நகராட்சியின் கட்டுப்பாடு அனைத்தும் செஞ்சி மஸ்தானின் மைத்துனர் ரிஸ்வானின் கட்டுப்பாட்டிலேயே இருக்கிறது’’ என புகார் வாசித்தனர்.

அதனைத்தொடர்ந்து, ரிஸ்வான் வகித்துவந்த விழுப்புரம் வடக்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் பொறுப்பிலிருந்து அவர் நீக்கப்பட்டார்... அதேபோல, விழுப்புரம் வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளராக இருந்து வந்த செஞ்சி மஸ்தானின் மகன் மொக்தியார் அலி மஸ்தானும் அந்தப் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார். அவர் செஞ்சி பேரூராட்சி தலைவராகவும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தகக்து.

அதுமட்டுல்ல, கடந்தாண்டு மார்ச் மாதம் செஞ்சி பேரூர் கழக செயளாளராக இருந்த மஸ்தானின் சகோதரர் காஜா நஜீரின் பதவியும் பறிக்கப்பட்டது. காரணம், மரக்காணம் கள்ளச்சாராய விவகாரம். தமிழக அரசியல் களத்தில் மிகப்பெரிய அளவில் விஸ்வரூபம் எடுத்த நேரம் அது. அதில் திண்டிவனம் 20-வது வார்டு திமுக கவுன்சிலரின் கணவர் மரூர் ராஜாவும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். அப்போது அமைச்சர் மஸ்தான் மரூர் ராஜாவுக்கு கேக் ஊட்டும் போட்டோ தீயாகப் பரவியது. இந்தப் புகைப்படத்தை சுட்டிக்காட்டி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் மஸ்தானின் அமைச்சர் பதவியை பறிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இந்நிலையில் அமைச்சர் மஸ்தானின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கட்சியின் முக்கிய பொறுப்புகளில் பல ஆண்டுகள் இருப்பதாகவும் தவறான நபர்களுடன் தொடர்பில் இருப்பதாகவும் திமுக தலைமைக்கு பல்வேறு புகார்கள் பறந்தன. அதனைத் தொடர்ந்துதான் காஜா நஜீரின் பதவி பறிக்கப்பட்டது.

தலைமைக்கு பறந்த புகார்கள்..

கடந்த மூன்று ஆண்டுகளாக, விழுப்புரம் வடக்கு மாவட்டம் முழுவதும் செஞ்சி மஸ்தானின் குடும்ப ஆதிக்கம் கொடி கட்டிப் பறந்தது. அதுமட்டுமில்லாமல் அடிக்கடி தலைமைக்குப் புகார்களும் பறந்தன... நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாகக் கூட திண்டிவனம் பகுதிக்கு வந்த முதல்வரிடம் மாவட்ட நிர்வாகிகள் அமைச்சருக்கு எதிராக புகார் வாசித்திருக்கிறார்கள். ஆனால், ஏற்கெனவே இஸ்லாமியரான அமைச்சர் நாசரின் பதவி பறிக்கப்பட்டிருக்கிறது. தவிர, திருநெல்வேலி மத்திய மாவட்ட செயலாளர் அப்துல் வஹாப்பின் பதவியும் பறிக்கப்பட்டது.

தேர்தல் நேரத்தில் செஞ்சி மஸ்தானின் பதவியைப் பறித்தால் அது தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்தலாம் என திமுக தலைமை கருதியதாகச் சொல்லப்படுகிறது. தற்போது, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருப்பதால் அதைக் காரணம் காட்டி மஸ்தானின் பதவி பறிக்கப்பட்டிருக்கிறது.

விக்கிரவாண்டியில் எம்.எல்.ஏவாக இருந்த புகழேந்தியின் மறைவைத் தொடர்ந்து, ஜூலை பத்தாம் தேதி அந்தத் தொகுதிக்கு இடைத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. அதற்கு வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிக்கபப்ட்டிருக்கிறார். தவிர, மறைந்த புகழேந்தி செயலாளராக பதவி வகித்த தெற்கு மாவட்டத்துக்கு, தற்போது அமைச்சர் பொன்முடியின் மகன் கௌதம சிகாமணி பொறுப்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார். வடக்கு மாவட்டத்தில்தான், மஸ்தானுக்குப் பதில் சேகர் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார். விழுப்புரம் மாவட்டத்தில் ஒரு வன்னியர், வன்னியர் அல்லாத ஒருவருக்கு மா.செ பொறுப்பு வழங்கவேண்டும் என்பதற்காகவே மஸ்தான் மாற்றப்பட்டிருக்கிறார் என்கிற தகவலும் பரப்பப்படுகிறது.

தவிர, விக்கிரவாண்டி தொகுதியில் தேர்தல் பணி செய்வதற்காகவே மஸ்தான் அந்தப் பொறுப்பில் இருந்து விடுவிக்கபப்ட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின்றன...ஆனால், மஸ்தான் பதவி பறிப்பு முன்பே திட்டமிடப்பட்ட ஒன்றுதான், ஆனால், சரியான நேரத்துக்காகக் காத்துக்கொண்டிருந்தது திமுக தலைமை என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்..