வேங்கைவயல் நீர்தேக்கத்தொட்டி புதிய தலைமுறை
தமிழ்நாடு

என்ன நடந்தது வேங்கைவயலில்? மனிதக்கழிவு கலந்து ஓராண்டு நிறைவு.. கண்டுபிடிக்க முடியாத குற்றவாளி!!

வேங்கைவயலில் குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலந்த விவகாரம் நடந்து இன்றோடு ஓராண்டாகிறது. சிபிசிஐடி விசாரித்து வரும் விவகாரத்தில் இன்னும் குற்றவாளி கண்டுபிடிக்கப்படவில்லை. இந்தநிலையில், வேங்கைவயல் விவகாரம் கடந்த வந்த பாதையை பார்க்கலாம்.

யுவபுருஷ்

புதுக்கோட்டை மாவட்டம் முத்துக்காடு ஊராட்சிக்குட்பட்ட பட்டியலின சமூக மக்கள் வாழும் கிராமம்தான் வேங்கைவயல். சுமார் நாற்பது குடும்பங்கள் வாழும் இந்த கிராமத்தில் குடிநீர் தேவைக்காக மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி இருக்கிறது. இந்நிலையில், இந்த தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட அதிர்ச்சி செய்தி, கடந்த ஆண்டு டிசம்பர் 26-ஆம் தேதி தெரிய வந்தது. இதுகுறித்து முதன்முதலில் புதிய தலைமுறையில் செய்தி வெளியிட்டு இழிவான இந்த செயல் குறித்து உலகிற்கு தெரியப்படுத்தப்பட்டது..

மனிதக்கழிவு கலக்கப்பட்டது தெரியவந்ததும், கந்தர்வக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினர் சின்னதுரை மற்றும் வருவாய்த் துறை உள்ளிட்ட அரசு அதிகாரிகள் விரைந்து குடிநீர்த் தொட்டியை ஆய்வு செய்தனர். அதிலிருந்து மாதிரியை சேகரித்ததோடு, தொட்டியையும் கழுவி சுத்தம் செய்தனர். தொட்டியில் இருந்து தண்ணீர் விநியோகம் செய்வது நிறுத்தப்பட்டு தொட்டியின் மேல் யாரும் ஏறிவிடாமல் இருக்கும் வகையில் பூட்டுபோடப்பட்டது.

வேங்கைவயலில் குடியிருக்கும் சுமார் 40 குடும்பத்தினரும் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பதால் சாதிய பாகுபாடுடன் இந்த செயல் நடந்திருக்கலாம் என்ற கருத்தும் வெளிப்பட்டது. காரணம், அருகில் இருக்கும் இறையூரில் மாற்றுச்சமூகத்தைச் சேர்ந்தவர்கள் வசிக்கின்றனர். இந்த இழி செயலை செய்தவர்களை உடனே கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை கட்சி, அமைப்பு பேதமின்றி ஒருமித்ததாக வலுப்பெற்றது.

இந்நிலையில், அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன், கயல்விழி மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் இறையூர் அய்யனார் கோயிலில் சமத்துவப் பொங்கல் வைத்து பொதுவழிபாடு நடத்தினர். சம்பவம் குறித்து வெள்ளனூர் காவல் நிலையத்தில் வன்கொடுமை உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு ஏடிஎஸ்பி தலைமையில் 11 பேர் கொண்ட குழுவினர் விசாரித்தனர். விவகாரத்தை கண்காணிப்பதற்காக சமூக நீதி கண்காணிப்புக் குழுவையும் தமிழக அரசு அமைத்தது.

சம்பவத்தில் சாட்சிகள் யாரும் இல்லாததால், மனிதக் கழிவை கலந்தது யாரென்று கண்டறிய முடியவில்லை. ‘குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். குடிநீர் தொட்டியை இடித்து அகற்ற வேண்டும்’ என்று போராட்டம் வெடித்தது. விவகாரம் பூதாகரமான நிலையில், வழக்கை சிபிசிஐடி பிரிவுக்கு கடந்த ஜனவரி 26 ஆம் தேதிக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட, மறுநாளே, சிபிசிஐடி காவல் துணைக் கண்காணிப்பாளர் பால்பாண்டி தலைமையிலான போலீஸார், வேங்கைவயலுக்கு நேரில் சென்று விசாரணையைத் தொடங்கினர்.

புதுக்கோட்டை மாவட்ட வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தின் ஒப்புதலுடன் விசாரணை நடைபெற்று வந்தது. பட்டியலின சமூகத்தினர் வாழும் வேங்கைவயல் மற்றும் மாற்று சமூக மக்கள் வாழும் இறையூர் ஆகிய 2 கிராமங்களைச் சேர்ந்தோர் தங்களுக்கு இடையே ஒருவரையொருவர் குற்றம்சாட்டி வந்ததால் இரு சமூக மக்களுக்கு இடையேயான பிரச்சினையாகவும் மாறியது.

இதையடுத்து, வேங்கைவயல், இறையூர் பகுதியில் 4 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு, தற்போது வரை நாள் முழுவதும் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். உள்ளூர்காரர்களைத் தவிர வேறு யாரையும் போலீஸார் ஊருக்குள் அனுமதிப்பதில்லை.

இதுவரையில் 221 பேரிடம் விசாரணை மேற்கொண்ட சிபிசிஐடி போலீஸார், சந்தேகிக்கும் விதமாக ஒரு வாட்ஸ்அப் குரூப்பில் குடிநீர் தொட்டி விவகாரத்தை விமர்சித்துக்கொண்ட 7 காவலர்களை விசாரணைக்கு உட்படுத்தினர்.

அதில், இருந்து ஒருவர் உட்பட மொத்தம் 2 பேரை சென்னையில் உள்ள தடயவியல் ஆய்வகத்துக்கு குரல்மாதிரி சோதனைக்கு உட்படுத்தினர்.

மேலும், வேங்கைவயல், இறையூர், முத்துக்காடு உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 5 சிறுவர்கள் உட்பட மொத்தம் 31 பேர் டிஎன்ஏ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அதில் இருந்து, 10 பேரை உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் சிபிசிஐடி போலீஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

346-வது நாளாக விவகாரத்தை சிபிசிஐடி விசாரித்து வரும் நிலையில், தேசிய பட்டியலின ஆணையம் மற்றும் தேசிய மனித உரிமைகள் ஆணையமும் இவ்விகாரத்தில் தலையிட்டது.

சிபிசிஐடி போலீஸாரின் விசாரணையிலும் யாரையும் கைது செய்யாததால், இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. விசாரித்த நீதிமன்றம், ஓய்வு பெற்ற நீதிபதி சத்தியநாராயணன் தலைமையில் ஒரு நபர் ஆணையத்தை அமைத்தது. அதன்படி ஆணையமும் புதுக்கோட்டை மாவட்டத்துக்கு நேரில் வந்து பல்வேறு துறை அலுலர்களுடன் ஆலோசனை நடத்தியது.

மனிதக் கழிவு கலக்கப்பட்ட தொட்டி பயன்படுத்தப்படாததால், அதிலிருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய மேல்நிலை நீர்த்தேக்கக் தொட்டி கட்டப்பட்டது. அனைத்துக் குடும்பத்தினருக்கும் புதிய குடிநீர் பைப் இணைப்புகளும் கொடுக்கப்பட்டுள்ளது. அனைத்துக் குடும்பத்தினருக்கும் மருத்துவ பரிசோதனை, சிகிச்சையும் அளிக்கப்பட்டது.

விவகாரம் குறித்து சிபிசிஐடி போலீஸார் கூறியபோது, நேரடி சாட்சி யாரும் இல்லாததால் அறிவியல் பூர்வமாக விசாரிக்கப்பட்டு வருகிறது. முதல்கட்ட விசாரணையில் சந்தேகிக்கப்படும் நபர்களை அடுத்தடுத்த கட்ட உயர் தொழில்நுட்ப விசாரணைக்கு உட்படுத்தி விசாரித்து வருகிறோம் என்றனர்.

சம்பவம் நடந்து ஓராண்டு ஆன நிலையில், கொஞ்சமும் இரக்கமில்லாத இந்த இழிசெயலை செய்தவர்கள் இன்னமும் கைது செய்யப்படாமல் இருப்பது அனைத்துத் தரப்பினரையும் அதிருப்தி அடைய செய்துள்ளது.