தமிழ்நாடு

வாட்ஸ் அப்பில் புகார்: 24 நேரத்தில் வைத்தீஸ்வரன் கோவில் பேரூராட்சி நடவடிக்கை

வாட்ஸ் அப்பில் புகார்: 24 நேரத்தில் வைத்தீஸ்வரன் கோவில் பேரூராட்சி நடவடிக்கை

PT

ஊரடங்கு காலத்தில் வாட்ஸ் அப் மூலம் பொது மக்கள் குறைகளைக் கேட்டு நடவடிக்கை எடுத்து வருகிறது வைத்தீஸ்வரன் கோவில் பேரூராட்சி.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே அமைந்துள்ள வைத்தீஸ்வரன் கோவில் பேரூராட்சி செயல் அலுவலராகக் குகன் என்பவர் பணியாற்றி வருகிறார்.இவர் பணியேற்ற நாள் முதல் பேரூராட்சி மக்களின் நலனுக்காக பல்வேறுத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார். அந்த வரிசையில் ஊரடங்கு தொடங்கிய நாள் முதல் அனைத்து பணிகளையும் சமூக வலைத்தளம் மூலமாகப் பொதுமக்களிடம் கொண்டு செல்லும் முயற்சியாகப் பேரூராட்சிக்கு எனத் தனி ஃபேஸ்புக் பக்கம் தொடங்கப்பட்டு பல்வேறு பணிகள் நடைபெற்று வந்தன.


அதன்படி சமையல் , மாணவ மாணவிகளுக்கான ஓவியம் ,மழைநீர் சேகரிப்பு உள்ளிட்ட பல தலைப்புகளில் என ஃபேஸ்புக் வழியே போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் ஆர்வமாகப் பங்குகொண்ட ஊர்மக்கள் ஊரடங்கைப் பயனுள்ளதாகக் கழித்தனர்.


ஊரடங்கின் போது பொதுமக்கள் தங்களது புகார்களைத் தெரிவிக்கத் தற்போது புதிய முயற்சியாக ஹலோ பேரூராட்சி என்ற வாட்ஸ் அப் எண்ணைப் பேரூராட்சி அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் படி பேரூராட்சிக்கு உட்பட்ட மக்கள் தங்கள் பகுதியில் உள்ள குறைபாடுகளை வாட்ஸ் அப் எண்ணில் தெரிவிக்கும் பட்சத்தில் அந்தப் புகார் மீது 2 முதல் 24 மணி நேரத்தில் நடவடிக்கை எடுத்து உரியத் தீர்வு காணப்படும் என்றும் புகார் நடவடிக்கைக்கான நேரம் அதிகமாகும் எனில் அப்பணிக்கான காலம் நிர்ணயம் செய்து தீர்வு காணப்படும் எனவும் பேரூராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டது.

அதன்படி திட்டம் அமல்படுத்தப்பட்ட 2 நாட்களில் 40 புகார்கள் பெறப்பட்டு அனைத்திற்கும் உடனடியாக தீர்வு காணப்பட்டுள்ளது. புகார் குறித்து புகைப்படத்துடன் பதிவிட்டால், தீர்வு காணப்பட்ட இடத்தின் புகைப்படம் மற்றும் சீரமைத்த பணியாளர்களின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிடப்படுகிறது.இதனால் பேரூராட்சி பணியாளர்கள் உற்சாகமாக பணியாற்றி வருகின்றனர்