தமிழ்நாடு

நடிகர் சங்கத் தேர்தலைச் சுற்றி நடப்பது என்ன ?

webteam

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு ஜூன் 23ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று மே 28ம் தேதி ஓய்வு பெற்ற நீதிபதியும், அச்சங்கத்தின் தேர்தலை நடத்தும் அதிகாரியுமான பத்மநாபன் அறிவித்தார். அவரின் அறிவிப்புக்கு பின் நடிகர் சங்கத்தின் தேர்தல் வேலைகள் சூடுபிடிக்க தொடங்கின. நாசர் தலைமையிலான பாண்டவர் அணியினரும், கே பாக்யராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணியி‌னரும் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.

இந்நிலையில், ஏழுமலை என்பவர், நடிகர் சங்கத்தில் இருந்து பல உறுப்பினர்களை நீக்கியுள்ளனர்.  இதனால் அந்த உறுப்பினர் பட்டியலை சரிபார்க்க உத்தரவிட வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மேலும் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த பாரதி ப்ரியன் என்பவர், 44 உறுப்பினர்கள் முறைகேடாக தொழில் முறை அல்லாதோர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர், இதனால் எங்களுக்கு வாக்களிக்கும் உரிமை பறிபோயுள்ளது என்று சங்கங்களின் பதிவாளரிடம் மனு கொடுத்தார்.

ஏழுமலை வழக்கை விசாரித்த நீதிபதி உறுப்பினர்கள் பட்டியலையும், எடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கான ஆதாரங்களையும் சமர்பிக்கும்படி கூறியிருந்தார். அதேபோல பாரதி ப்ரியன் மனுவுக்கு நடிகர் சங்கத்திடம் சங்கங்களின் பதிவாளர் விளக்கம் கேட்டார். இதற்கு கடந்த திங்கள் கிழமை நடிகர் சங்கம் சார்பில் விஷால் விளக்கம் அளித்தார்.

இந்த நிலையில் 44 உறுப்பினர்களை மாற்றியது தொடர்பாகவும், பதவி காலம் முடிந்த பிறகு பொதுக்குழு அனுமதி பெற்று நாசர் தலைமையிலான அணி செயல்பட்டது தொடர்பாகவும் ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. இதனால் தேர்தலை நடத்த தடை விதிப்பதாக தென் சென்னை மாவட்ட சங்கங்களின் பதிவாளர் கூறினார்.

பதிவாளர் தேர்தலை நிறுத்த உத்தரவிட்டதை எதிர்த்து விஷால் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த நிலையில் மொத்த உறுப்பர்களின் பட்டியலை சரிபார்க்க வேண்டும் என்று ஏழுமலை என்பவர் தொடர்ந்த வழக்கில், நடிகர் சங்கத்தின் அனைத்து நடவடிக்கைகள், உறுப்பினர் நீக்கம் மற்றும் சேர்ப்பு அனைத்தும் சரியாகவே உள்ளது என்று நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார். மேலும் அந்த வழக்கை 25ம் தேதிக்கு ஒத்தி வைத்துவிட்டார்.

இதனால் விஷால் மனு மீது நடைபெறவுள்ள விசாரணை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. மேலும் நடிகர் சங்க தேர்தல் நடக்குமா நடக்காதா என்ற எதிர்பார்ப்பு சங்க உறுப்பினர்கள் மத்தியில் நிலவுகிறது.