கொரோனா பரவலை கட்டுப்படுத்தவும், உயிரிழப்புகளை தவிர்க்கவும் தமிழக அரசு உருவாக்கியுள்ள 'வார் ரூம்' எனப்படும் கட்டளை மையத்தின் செயல்பாடுகள் என்னவென்று விரிவாக தெரிந்துகொள்வோம்.
கொரோனா 2-ஆவது அலை வேகமாக பரவிவரும் சூழலில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு சார்பில் சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ் வளாகத்தில் கொரோனா தடுப்பு கட்டளை மையம் தொடங்கப்பட்டு செயல்பாட்டுக்கு வந்துள்ளது. 65 மருத்துவர்கள், 4 தொழில்நுட்ப வல்லுநர்கள் கொண்ட குழுவினர் கணினி மூலம் சுகாதார பேரிடரை கையாளத் தொடங்கியுள்ளனர்.
மருத்துவ படுக்கைகள், ஆக்சிஜன் தேவை, தீவிர சிகிச்சை உள்ளிட்டவற்றை உறுதி செய்யும் வகையும், தமிழகத்தில் உள்ள அனைத்து சுகாதார தரவுகளையும் ஒருங்கிணைத்து மென்பொருள் வழியே மருத்துவத் தேவைகளை பூர்த்தி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 108 மற்றும் 104 அவசர தொலைபேசி எண் வழியே வரும் அழைப்புகள், சமூக வலைதளங்களில் ஹேஷ்டேக் உடன் கேட்கப்படும் மருத்துவ உதவிகளை இந்தக் குழு தரம் பிரித்து தேவையான உதவிகளை அளித்து வருகிறது.
தீவிரமாக பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகள், இணை நோய் உள்ளவர்கள், நுரையீரல் பாதிப்பு உள்ளவர்கள், குறைவான பாதிப்பு உடையவர்கள் என பிரித்தறிந்து கட்டளை மையங்கள் வழியே மருத்துவமனைகள், படுக்கைகள் ஒதுக்கப்படுவதால், பற்றாக்குறைகளை அறிய முடிகிறது என்றும் இதனால் மருத்துவ தேவைகளை முன் கூட்டியே திட்டமிட வாய்ப்புள்ளதாகவும் கூறுகிறார் கட்டளை மைய அதிகாரி கணேசன்.
தொடுதிரை வழியே 24 மணி நேரமும், மருத்துவ படுக்கை, ஆக்சிஜன் தேவை, தீவிர சிகிச்சை படுக்கைகள் உள்ளிட்ட தரவுகளை மாநிலம் முழுவதும் கட்டளை மையம் கண்காணிக்கிறது. இதன் மூலம் தேவையற்ற பதற்றத்தையும், தேவைக்கேற்ப திட்டமிடுதலையும் மேற்கொள்ள முடியும் என்கிறார்கள் கட்டளை மைய அதிகாரிகள்.