தமிழ்நாடு

விவசாயிகள் உயிரிழப்பு: உண்மை என்ன?

விவசாயிகள் உயிரிழப்பு: உண்மை என்ன?

Rasus

விவசாயம் பொய்த்ததால் உருவான மன அழுத்தம் காரணமாகவே மாரடைப்பு ஏற்பட்டு உழவர்கள் உயிரிழந்திருக்க வாய்ப்பு அதிகம் என்று உண்மை கண்டறியும் குழு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக நாகை மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் ஆய்வு நடத்திய பின்னர் மக்கள் சிவில் உரிமைக்கழகம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், தற்கொலை செய்து கொண்ட அனைவரும் கருகிய பயிரைக் காப்பாற்ற இயலாத காரணத்தாலும், ஈடு செய்ய முடியாத கந்துவட்டிக் கடன் சுமையாலும் சிக்கி இருந்தது தெரியவந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒரு சிலர் வயது மூப்பின் காரணத்தால் இறந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தாலும், இதய நோயிற்கான எவ்வித பின்புலமும் இல்லாத பின்னணியில் அவர்களுக்கு ஏற்பட்ட மாரடைப்புக்கு மன அழுத்தமே காரணமாக இருந்திருக்க முடியும் என உண்மை கண்டறியும் குழு கருதுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெற்களஞ்சியம் என்று போற்றப்பட்ட தஞ்சை மண்டலம் மூன்று போக விளைச்சலைக் கண்டு முப்பது ஆண்டுகளும், இருபோக விளைச்சலைக் கண்டு இருபது ஆண்டுகளும் ஆகிவிட்டதாக கூறப்பட்டிருக்கிறது. ஆகவே, உயிரிழந்த உழவர்களின் குடும்பங்களுக்கு மத்திய, மாநில அரசுகள் தலா பத்து லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று உண்மை கண்டறியும் குழு வலியுறுத்தியுள்ளது.