guna cave secrets pt
தமிழ்நாடு

என்னதான் இருக்கிறது குணா குகையில்? மறைந்திருக்கும் பொந்துகள்.. வெளிவராத மர்மம்!

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் டெவில்ஸ் கிச்சன் என்று அழைக்கப்பட்டு, நடிகர் கமல்ஹாசனின் குணா படத்திற்கு பிறகு குணா குகை என்று பெயர் பெற்ற குகையானது மலையாள படமான மஞ்சுமெல் பாய்ஸ் படத்தின் வெளியீட்டுக்குப் பிறகு மீண்டும் ஹாட் டாப்பிக் ஆக மாறியுள்ளது.

யுவபுருஷ்

குகைக்குள் அதன் சூழல் தெரியாமல் இறங்கியவர்கள் அனைவரும், இறந்துபோனதும், அவர்களின் எலும்புக்கூடு கூட கிடைக்காததும் ஆகப்பெரிய ரணமான வரலாறு என்பதை மறுப்பதற்கில்லை. இந்த நேரத்தில், குணா குகையின் ஆழமான வரலாற்றுப் பக்கங்களை சற்றே புரட்டிப்பார்க்கும் முயற்சியே இந்த சிறப்புத் தொகுப்பு.

எட்டிப்பார்த்தாலே கிறுகிறுப்பை உண்டாக்கும், ஆபத்தான பள்ளத்தாக்குகளுக்கு நடுவே, பிரம்மாண்டமாய் வானுயர அமைந்திருப்பதுதான் கொடைக்கானல் தூண் பாறைகள். இந்த தூண்களின் உள்ளே ஆழமாக பல அடுக்குகளை கொண்ட பிரம்மாண்ட குகைகளாக பள்ளத்தில் நீண்டு கொண்டே, இருப்பதுதான் பேய்க்குகை என ஆங்கிலேயரால், அழைக்கப்பட்டு, குணா பட பிரபலத்திற்கு பின்னர் குணா குகை என்று மாறிய குகையாகும்.

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில், அந்த குகைக்குள் சாகச பயணம் செய்யும் அவர்கள், உள்ளே சில நாட்கள் தங்கி உணவு சமைத்த காரணத்ததாலும், அதில் செல்பவர்கள் பலர் உயிரிழந்ததாலும் ‘டெவில்ஸ் கிச்சன்’ என கால ஓட்டத்தில் குகைக்கு பெயர் வந்ததாக கூறுகின்றனர் உள்ளூர் வாசிகள்.

ஆழமான குகை என்றாலும், ஆங்காங்கே சூரிய ஒளிபட்டு இருளும், ஒளியுமாக, பார்த்தாலே பதற்றத்தை உண்டாக்கும் இந்த குகைக்குள், நாமும் ஒருமுறை சென்று பார்க்க வேண்டும் என்று படையெடுத்த பலர் காணாமல் போயுள்ளனர்.

குறிப்பாக குணா படத்தில் இடம்பெற்ற கண்மணி அன்போடு காதலன் பாடல் முழுமையாக குகைக்குள்தான் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். இருவருக்கும் இடையிலான ரொமான்ஸைத் தாண்டி, குகையின் அழகியலை காட்சிப்படுத்தியிருப்பார் இயக்குனர் சந்தான பாரதி.

அந்தப் படத்தில் காட்சிப்படுத்தப்பட்டதைத்தாண்டி, பல மடங்குகள் குகைகள் நீண்டிருப்பதுதான் நிதர்சனம். இது தெரியாமல், ஆர்வத்தில் குகைக்குள் சென்ற பலர் புற்கள் மற்றும் புதற்களால் கண்களுக்கு தெரியாமல் மறைந்துள்ள பொந்துகளில் விழுந்து உயிரிழந்துள்ளனர். கடந்த 20 ஆண்டுகளில் சுமார் 25க்கும் மேற்பட்டவர்கள் இந்த குகைக்குள் சென்று இறந்துள்ளதாக கூறப்படுகிறது.

குறிப்பாக கடந்த 2006ம் ஆண்டு இந்த குகைக்குள் சென்ற நண்பர்கள் குழுவில் ஒருவர் சிக்கிக்கொண்ட நிலையில், பெரும் போராட்டத்திற்கு பிறகு மீட்கப்படுகிறார். சுமார் 60 அடி ஆழத்தில் அவர் சிக்கியதாக கூறப்படுகிறது. இந்த உண்மைக் சம்பவத்தைதான் கொஞ்சம் த்ரில்லர் மசாலாவுடன் சேர்த்து மஞ்சுமெல் பாய்ஸ் படமாக கொடுத்துள்ளார் இயக்குநர் சிதம்பரம்.

இதற்கிடையே, தொடர் உயிரிழப்புகளுக்கு பின்னர், குகைக்கு செல்லும் பாதையில் உள்ள ஆழமான பள்ளத்தாக்கு பொந்துகளை இரும்பு வேலி உதவியுடன் மூடியும், குகைப்பகுதியை நெருங்க முடியாதவாறு தடுப்புகள் அமைத்தும் வனத்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதனால், கடந்த ஏழு ஆண்டுகளாக உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை என்பது சற்று ஆறுதலான செய்தி.

ஏற்கெனவே, குணா படத்திம் மூலம் பிரபலமடைந்த இந்த குகை, தற்போது மஞ்சுமெல் பாய்ஸ் படத்தின் மூலம், மீண்டும் அனைவராலும் பேசுபொருளாக மாறியுள்ளது. இதனால், அங்கு செல்லும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கையும் கடந்த சில தினங்களாக கணிசமாக அதிகரித்துள்ளது. இந்நிலையில், குகை வரை செல்ல முடியாவிட்டாலும், அதன் முகப்பு பகுதி வரை சென்று காணும் அளவிற்கு, வனத்துறை உட்கட்டமைப்புகளை ஏற்படுத்தி தர வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர் சுற்றுலா ஆர்வலர்கள்.