தமிழ்நாடு

நந்தம்பாக்கம் கொரோனா சிகிச்சை மையத்தின் நிலை என்ன?

Sinekadhara

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் முதல்கட்டமாக ஆக்சிஜன் வசதி கொண்ட 400 படுக்கைகள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன. 

சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் படுக்கைகள் அனைத்தும் நிரம்பிவிட்டதால் நோயாளிகள் ஆம்புலன்சில் காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இந்த பற்றாக்குறையை சரிசெய்யும் நோக்கத்தில்தான் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் ஆயிரம் படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையத்தை தமிழக அரசு ஏற்படுத்தி வருகிறது. அதில் 800 படுக்கைகள் ஆக்சிஜன் வசதி கொண்டவை. இதில் முதல்கட்டமாக 400 படுக்கைகள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன. அவற்றில் 35 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதே நேரத்தில் ராஜீவ் காந்தி மற்றும் ஸ்டான்லி அரசு மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் படுக்கைகள் இல்லாமல் ஆம்புலன்சில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, நந்தம்பாக்கம் சிகிச்சை மையத்தை முழு வீச்சில் பயன்பாட்டிற்கு கொண்டுவரவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. கொரோனா பாதித்தவர்கள் பெரும்பாலும் மூச்சுத் திணறல் ஏற்பட்டுத்தான் மருத்துவமனைக்கு வருகின்றனர். அவர்களை பரிசோதித்து நந்தம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுவருவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் நந்தம்பாக்கம் சிகிச்சை மையத்தில் மருத்துவர்கள், செவிலியர்கள் சுழற்சி முறையில் பணியில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கொரோனா முதல் அலையின்போது தமிழகத்தில் தினசரி பாதிப்பு 7 ஆயிரத்தை தாண்டவில்லை. ஆனால் இப்போது சென்னையில் மட்டும் தினந்தோறும் 7 ஆயிரத்துக்கும் மேல் தொற்று ஏற்படுகிறது. எனவே, நோய் பரவல் வேகத்தை கருத்தில்கொண்டு அரசு துரிதமாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக உள்ளது.