மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியாக பச்சை பசேலென்று போர்வை போர்த்தியது போல் உள்ள மலையில் காலையில் செங்கதிரவன் உதித்து எழ மிதமான வெப்பம் பரவி குளிருக்கு இதமளிக்கும். திரும்பிப் பார்க்கும் இடமெல்லாம் ஓங்கி உயர்ந்த மரங்களை ஊடுருவிச் செல்லும் மேகக் கூட்டங்கள், மனதை கொள்ளை கொள்ளும் குதிரை ஏற்றம், சாரல் துளிகள் வீசும் அருவிகளும் கண்கொள்ளாக் காட்சி. இப்படி இயற்கையின் அழகை அள்ளிக் கொடுத்துக் கொண்டிருக்கும் மலைகளின் இளவரசி, தமிழகத்தின் முதன்மை சுற்றுலாத் தலமாக விளங்குகிறது.
தொடர் விடுமுறை வந்துவிட்டால் கொடைக்கானலுக்கு குடும்பத்துடன் செல்லலாம் என நினைக்கும் பலருக்கும் தற்போது ஒரு எரிச்சல் ஏற்படத்தான் செய்கிறது. மலைப் பகுதிகளுக்கு பல்லாயிரக் கணக்கான வாகனங்கள் படையெடுப்பதால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலே அதற்குக் காரணம். தொலைவில் இருந்து வந்தாலும் கடைசி 10 கிலோ மீட்டர் தொலைவிற்கு வாகனங்கள் எறும்புபோல் ஊர்ந்து செல்வதால் ஏற்படும் வாகன புகையால் மூச்சுவிட முடியாத சூழலை ஏற்படுத்துகிறது.
அது என்ன, கடைசி பத்து கிலோ மீட்டர் என, கேள்வி எழலாம், கொடைக்கானல் மலையேற திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து, வத்தலகுண்டு, தாண்டிக்குடி, பழனி வழியாக, மூன்று நெடுஞ்சாலைகளும், தேனி மாவட்டத்தில் இருந்து, பெரியகுளம் வழியாக, ஒரு நெடுஞ்சாலையும் பெருமாள்மலை வரை உள்ளது. பிரதான சந்திப்பான பெருமாள் மலையில், இந்த நான்கு சாலைகளும் ஒன்றாக சந்தித்து அதன் பின்னர் ஒரே சாலையாக மாறி கொடைக்கானல் நகருக்கு செல்கிறது.
இதனால் தொடர் விடுமுறைக்கு வரும் ஏராளமான வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கும் நிலை உள்ளது. போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த பல ஆண்டுகளாக மாற்றுச்சாலை அமைப்பதற்கு யோசனை கூறினாலும் அதிகாரிகள் கண்டுn காள்ளாமல் இருப்பது ஏன்? எனத் தெரியவில்லை என உள்ளூர்வாசிகள் ஆதங்கப்படுங்கின்றனர்.
அடுத்த பிரதான பிரச்னையாக மலைப் பகுதிகளுக்கு வரும் வாகனங்களை நிறுத்த போதிய வாகனநிறுத்தங்கள் இல்லாததால் நகருக்குள் உலாவரும் வாகனங்கள் இருக்கும் ஏழு சாலையிலே சுற்றிச் சுற்றி வருவதால் மாலை இரவு நேரங்களில் நகரே முடங்கும் அளவிற்கு வாகன நெரிசல் ஏற்படுகிறது. நகர்ப் பகுதியில் சில இடங்களில் அடுக்கு தள வாகன நிறுத்தங்கள் அமைக்க நகராட்சி திட்டம் வகுத்துள்ளதாக கூறினாலும், இன்னும ;அதற்கான பணிகள ;தொடங்கப்படாமலே உள்ளது.
தங்களின் வாழ்வாதாரமே சுற்றுலாவை நம்பித்தான் இருக்கிறது எனக் கூறும் உள்ளூர்வாசிகள் தசாப்தங்களாக வலியுறுத்தி வரும் மாற்றுச்சாலை திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வலியுறுத்துகின்றனர். சுற்றுலா துறையை மேம்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்தும் வரும் நிலையில், கொடைக்கானல் மக்கள் கூறும் பிரச்னைகளை செவிசாய்த்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
செய்தியாளர்: செல்வ மகேஷ்ராஜா