ஐந்து நாள் பயணமாக டெல்லி சென்ற தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி நான்கு நாட்களில் பயணத்தை முடித்துக்கொண்டு நேற்று தமிழ்நாடு திரும்பினார். டெல்லியில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜூஜு உள்ளிட்ட பல முக்கியத் தலைவர்களைச் சந்தித்துள்ளார்.
வெற்றி பெற்றதற்கு வாழ்த்து தெரிவிக்க, சட்டம் ஒழுங்கு குறித்து விவாதிக்க, நீட் குறித்து விளக்கமளிக்க என ஆளுநரின் டெல்லி பயணம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியானது. ஆனால், ஆளுநரின் பயணம் என்பதோ, முடிவடையும் அவரின் பதவிக்காலம் குறித்தது என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள்.
மத்திய உளவுத்துறையான IB-யில் அதிகாரியாகப் பணியாற்றிய ஐ.பி.எஸ் ரவி, 2019 ஆகஸ்ட் மாதம் நாகலாந்து மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். அங்கு இரண்டாண்டுகள் பணியாற்றியிருந்த நிலையில், தமிழக ஆளுநராக 2021-ம் ஆண்டு செப்டம்பர் ஒன்பதாம் தேதி அப்போதைய குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்தால் நியமிக்கப்பட்டார். அந்தவகையில், நாகலாந்தில் இரண்டு வருடம், தமிழ்நாட்டில் மூன்று வருடம் என அவரின் பதவிக்காலம் வரும் ஆகஸ்ட் 31-ம் தேதியோடு முடிவடைகிறது. இந்தநிலையில், அடுத்து தன்னுடைய பதவிக்காலம் நீட்டிப்பது குறித்து பேசுவதற்காகவே அவர் டெல்லி சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக விபரம் அறிந்தவர்களிடம் பேசினோம். அவர்கள் கூறியதாவது, “ஆளுநரின் பதவிக்காலம் ஐந்து வருடங்கள்தான். அந்தவகையில், வரும் ஆகஸ்ட் 31-ம் தேதியோடு ஆர்.என்.ரவியின் பதவிக்காலம் முடிவடைகிறது. 2016-ல் அஸ்ஸாமின் ஆளுநராக நியமிக்கப்பட்ட பன்வாரிலால் புரோகித்தின் பதவிக்காலம் தமிழ்நாட்டில் ஆளுநராக இருந்த 2021-ம் ஆண்டில் முடிவடைந்தது. தொடர்ந்து, பஞ்சாப் மாநில ஆளுநராக அவரின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டது.
அதேபோல, ஆளுநர் ஆர்.என் ரவியின் பதவிக்காலமும் நீட்டிக்கப்பட வாய்ப்பு அதிகமாகவே இருக்கிறது. ஆனால், ஆர்.என்.ரவி தரப்பில் இருந்து அதற்காக எந்த அழுத்தமும் கொடுக்கப்படவில்லை. ஆளுநர் பதவியே டெல்லி தலைமைதான் முடிவு செய்து கொடுத்தது. அதனால், அவர் எந்த கோரிக்கையையும் வைக்கமாட்டார். ஆனால், அவருடைய பதவி கண்டிப்பாக நீட்டிக்கப்படும். 2026-ல் தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தலும் வருகிறது. அதனால் அவரின் பதவிக்காலம் கண்டிப்பாக நீட்டிக்கப்படும்” என்கிறார்கள்.
தமிழ்நாட்டில் ஆளுநராக ஆர்.என்ரவி அறிவிக்கப்பட்டு, பொறுப்பேற்றதற்கு முன்பாகவே அவருக்கு எதிராக விமர்சனங்கள் வரத்தொடங்கின. உளவுத்துறையில் பணியாற்றிய ஒருவரை ஆளுநராக நியமிக்கக்கூடாது என விசிக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் கடுமையான எதிர்ப்புத் தெரிவித்தன.
தொடர்ந்து ஆளுநரின் பல்வேறு கருத்துகள், செயல்பாடுகள் சர்ச்சைக்குள்ளானது. தமிழக அமைச்சரவை மாற்ற விவகாரத்திலும் ஆளுநர் தலையிட ஆளுநருக்கும் அரசுக்கும் இடையேயான மோதல், உச்சக்கட்டத்தை நோக்கி நகந்தது. ‘GetOutRavi’, ‘கிண்டிக்கு ஒரு கேள்வி’ ‘Postman Ravi’ என தமிழகம் முழுவதும் போஸ்டர் அடித்து ஒட்டத் தொடங்கினர் திமுகவினர். ஆளுநருக்கு எதிராக பல போராட்டங்களையும் முன்னெடுத்தனர். ஆளுநரை திரும்பப் பெறக்கோரி, தமிழ்நாடு சட்டமன்றத்திலும், டெல்லியிலும் பல்வேறு முன்னெடுப்புகளை திமுக செய்தது. மதிமுக கையெழுத்து இயக்கம் நடத்திய போது, காங்கிரஸோ ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டது.
அதேவேளை, தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து, அதிமுக, பாஜக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் சமீபத்தில் ஆளுநரைச் சந்தித்து புகாரளித்தனர். ஏற்கெனவே, தமிழ்நாட்டில் ஆளுநருக்கும் ஆளும் கூட்டணிக் கட்சிகளுக்கும் இடையே எப்போதும் ஏழாம் பொருத்தம்தான்.
தவிர, திருவள்ளுவர், வள்ளலார் குறித்த ஆளுநரின் கருத்துக்கள் அரசியல் கட்சிகளையும்தாண்டி, பொதுவான பலரின் விமர்சனத்துக்கும் உள்ளாகியிருக்கிறது. இந்தநிலையில், அவரின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டால், தமிழக அரசியல் களம் இன்னும் சூடு பறக்கும் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.