விஜய் - எடப்பாடி பழனிசாமி web
தமிழ்நாடு

"திமுக எதிர்ப்பு; விதை அவர், அறுவடை நமக்கு" - விஜய் வருகை தந்த உற்சாகம்.. இ.பி.எஸ்ஸின் திட்டம் என்ன?

புதிய கட்சி வருகை, உள்கட்சி பிரச்னை, சட்டமன்ற பொதுத்தேர்தல் அனைத்தையும் எதிர்கொள்ளும் வகையில் அதிமுக கையிலெடுத்துள்ள செயல்பாடுகள் குறித்து விரிவாக அலசுகிறது கட்டுரை.

PT WEB

பாஜக திமுக தவிர மற்ற கட்சிகளை விமர்சிக்க வேண்டாம் என்பதில் தொடங்கி விஜயின் வருகையை எவ்வாறு அணுகுவது என்பதுவரை பல்வேறு விஷயங்கள் இன்று நடந்த அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டத்தில் பேசப்பட்டிருக்கிறது..,தவிர, பொதுக்குழுவுக்கு முன்பாகவே உட்கட்சித் தேர்தலை நடத்தி முடிக்கவும் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டிருக்கிறார்..

ஆனால், எடப்பாடி பழனிசாமியின் சமீபத்திய துரித செயல்பாடுகளுக்குப் பின்னால் பல்ல்வேறு காரணங்கள் இருக்கின்றன என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள்..,நடப்பது என்ன?..,விரிவாகப் பார்ப்போம்..,

அதிமுகவின் வியூகம் என்ன?

தமிழ்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவின், மாவட்டச் செயலாளர்கள் கூட்டம், சென்னை இராயப்பேட்டையில் உள்ள எம்.ஜி.ஆர் மாளிகையில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிற மாநிலச் செயலாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது..

அந்தவகையில், மொத்தமுள்ள 82 மாவட்டச் செயலாளர்களில், 81 பேர் கலந்துகொண்டனர். 2026 சட்டமன்றத் தேர்தலை எப்படி எதிர்கொள்வது, உட்கட்சித் தேர்தலை விரைவாக நடத்தி முடிப்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டிருக்கிறது. புதிதாகக் கட்சி தொடங்கியிருக்கும் விஜயுடன் கூட்டணி வைக்கலாமா என்பது குறித்தும் ஆலோசனை நடத்தியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், எடப்பாடி பழனிசாமியின் இந்த ஆலோசனைக் கூட்டத்துப் பின்னால் பல்வேறு காரணங்கள் இருக்கின்றன என்கிறார்கள் விபரம் அறிந்த கட்சி நிர்வாகிகள்.

எடப்பாடி பழனிசாமி

``நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்குப்பிறகு மீண்டுமே கட்சியில் ஓ,பி.எஸ், சசிகலா உள்ளிட்டவர்களை இணைப்பது குறித்து குரல் ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது..,டிசம்பரில் அனைவரும் ஒன்றிணைந்து விடுவோம் என ஓ.பி.எஸ் தரப்பிலிருந்து வெளியாகும் தொடர் பிரசாரம் எடப்பாடி பழனிசாமியை ரொம்பவே டிஸ்டர்ப் செய்திருக்கிறது. அதனால்தான், மாவட்டச் செயலாளர்கள் எல்லாம் என்னோடுதான் இருக்கிறார்கள் என மீண்டுமொருமுறை தனது பலத்தை நிரூபிக்கவே எடப்பாடி பழனிசாமி இந்த ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டியிருக்கிறார். அதுமட்டுமல்ல, தற்போதிருக்கும் கட்சி நிர்வாகிகளில் கணிசமானோர் ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள்..,அவர்களையும் முழுமையாகக் களையெடுத்து தன்னுடைய ஆதரவாளர்களையே அனைத்துப் பொறுப்புகளிலும் நியமிக்கவேண்டும் எனவும் எடப்பாடி பழனிசாமி முடிவெடுத்திருக்கிறார்..

எடப்பாடி பழனிசாமி

அதேபோல, திமுக கூட்டணிக் கட்சியினரை விமர்சிக்க வேண்டாம்..விசிக உள்ளிட்ட கட்சிகளை தங்கள் பக்கம் இழுக்கலாம் என இப்போதும் எடப்பாடி பழனிசாமி தீர்க்கமாக நம்பிக்கொண்டிருக்கிறார். திருமாவளவன் முன்வைத்த ஆட்சியில் பங்கு கோஷத்தை தங்களை நோக்கி வைக்கப்பட்ட டிமாண்டாகவே அவர் பார்க்கிறார். அதனால்தான் இப்படியொரு அறிவுரையை வழங்கியிருக்கிறார்.

தவிர, விஜய்யின் அரசியல் வருகை எங்கள் கட்சிக்கு ஒரு புதிய உற்சாகத்தைக் கொடுத்திருக்கிறது.. முடிந்தால் அவருடன் கூட்டணி அமைக்கவேண்டும் இல்லாவிட்டால் அவரின் திமுக எதிர்ப்பு விமர்சனங்களையும் தங்களுக்கு சாதகமாக்கிக்கொள்ள வேலை செய்யவேண்டும் என கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். விஜய் என்னதான் கடுமையான விமர்சனங்களை திமுகமீது முன்வைத்தாலும், கீழ்மட்ட அளவில் அதை அறுவடை செய்ய அந்தக் கட்சி நிர்வாகிகளுக்கு போதிய அனுபவமில்லை. அதை அதிமுகவுக்குச் சாதகமாக்கிக்கொள்ள வேண்டும் என நினைக்கிறார் எடப்பாடி பழனிசாமி. எல்லாவற்றையும் தாண்டி கட்சி நிர்வாகிகள் அனைவரும் என் பக்கம்தான் என மீண்டும் ஒருமுறை நிரூபிக்கவே இந்த ஏற்பாடுகள் எல்லாம்’’ என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள்..,